Pro kabaddi Bengal and Telugu teams ended up playing the game ...

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 131-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் 37-37 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 131-வது ஆட்டத்தில் புனேவில் நேற்று நடைபெற்றது.

இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 21 ரைடு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் ஔட் புள்ளிகள், ஒரு கூடுதல் புள்ளி பெற்றது.

பெங்கால் வாரியர்ஸ் அணி 20 ரைடு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் ஔட் புள்ளிகள், 5 கூடுதல் புள்ளிகள் பெற்றது.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே ரைடின் மூலம் தங்களது முதல் புள்ளியை கைப்பற்ற, 2-வது நிமிடத்தில் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. 3-வது நிமிடத்தில் தெலுங்கு வீரர் நிலேஷ் ரைடு புள்ளிகளைப் பெற, அந்த அணி 3-1 என முன்னிலை பெற்றது. 4-வது நிமிடத்தில் ரைடு வந்த தெலுங்கு கேப்டன் ராகுல் செளதரியை ஔட் செய்த பெங்கால் 3-3 என சமன் செய்தது.

அடுத்த மூன்று நிமிடங்களில் அந்த அணி 6-4 என முன்னிலை பெற்றது. 9-வது நிமிடத்தில் தெலுங்குவை ஆல் ஔட் செய்த அந்த அணி அணி, 11-6 என்ற நிலையை எட்டியது. முதல் பத்து நிமிடங்கள் வரையில் தெலுங்கு கேப்டன் ராகுல் ரைடு புள்ளியை கைப்பற்றத் தவற, 11-வது நிமிடத்தில் அந்த அணி 6-15 என பின்தங்கியது.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் நிலேஷ், ராகுல் ஆகியோர் தெலுங்கு அணிக்கு ரைடு புள்ளிகளை வென்று தர, 11-16 என்ற நிலையை எட்டியது அந்த அணி. அப்போது பெங்காலை ஆல் ஔட் செய்த அந்த அணி, 17-வது நிமிடத்தில் 16-18 என்ற நிலையை எட்டியது., முதல் பாதி முடிவில் பெங்கால் 20-17 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பெங்கால் அபாரமாக ஆடி 24-18 என முன்னேறியது. எனினும், 15-வது நிமிடத்தில் சூப்பர் டேக்கிள் மூலம் 21-25 என்ற நிலையை தெலுங்கு டைட்டன்ஸ் எட்டியது.

பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் ஆட இறுதியில் ஆட்டம் 37-37 என சமன் ஆனது.

இதில், தெலுங்கு டைட்டன்ஸ் தரப்பில் 16 முறை ரைடு சென்ற நிலேஷ், 7 புள்ளிகளை கைப்பற்றினார். தடுப்பாட்டக்காரர் விஷால் பரத்வாஜ் 7 முயற்சிகளில் 4 டேக்கிள் புள்ளிகளைப் பெற்றார்.

பெங்கால் வாரியர்ஸ் அணியில் ரைடர் ஜங் குன் லீ 14 முயற்சிகளில் 8 புள்ளிகள் கைப்பற்றினார். தடுப்பாட்ட வீரர் சுர்ஜீத் சிங் 6 முயற்சிகளில் 5 டேக்கிள் புள்ளிகள் வென்றார்.

பெங்கால் வாரியர்ஸ் இதுவரை ஆடிய 22 ஆட்டங்களில் 11 வெற்றிகள், 5 தோல்விகளுடன் 6 ஆட்டங்களை சமன் செய்து 77 புள்ளிகளுடன் "பி' பிரிவு முதலிடத்தில் உள்ளது.

தெலுங்கு டைட்டன்ஸ் அணி 22 ஆட்டங்களில் 7 வெற்றி, 12 தோல்விகளுடன் 3 ஆட்டங்களை சமன் செய்து 52 புள்ளிகளோடு அதே பிரிவில் 5-வது இடத்தில் உள்ளது.