Asianet News TamilAsianet News Tamil

புரோ கபடி: விறுவிறுப்பாக நடைபெற்ற அரியாணா - ஜெய்ப்பூர் ஆட்டம் சமனில் முடிந்தது…

Pro Kabaddi Ariyana - Jaipur match finished with equal ...
Pro Kabaddi Ariyana - Jaipur match finished with equal ...
Author
First Published Sep 15, 2017, 9:31 AM IST


புரோ கபடி லீக் சீசன் - 5 போட்டியில் அரியாணா ஸ்டீலர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டம் 27-27 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

புரோ கபடி லீக் சீசன் - 5 போட்டியில் அரியாணா ஸ்டீலர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் இடையேயான ஆட்டம் அரியாணா மாநிலம் சோன்பட்டில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் நிதானமாக ஆடி முதல் மூன்று நிமிடங்களின் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமன் அடைந்தன.

தீபக் குமார் தாஹியா 6-வது நிமிடத்தில் தனது ரைடின் மூலம் இரு புள்ளிகளைக் கைப்பற்ற, அரியாணா அணி 5-4 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

தாஹியா தொடர்ந்து அபாரமாக ஆடி 9-வது நிமிடத்தில் 8-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது அரியாணா.

பிறகு 15-வது நிமிடத்தில் ஜெய்ப்பூர் அணியை ஆல் அவுட்டாக்கிய அரியாணா அணி 14-7 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து அபாரமாக ஆடி அரியாணா அணி முதல் பாதி ஆட்டநேரம் வரை முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது. முதல் பாதி முடிவில் 17-9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது அரியாணா.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது. ஒட்டுமொத்தமாக 22-ஆவது நிமிடம் டேக்கிள் மூலம் முதல் புள்ளியைக் கைப்பற்றியது ஜெய்ப்பூர்.

இதன்பிறகு சிறப்பாக ஆடிய ஜெய்ப்பூர் அணி 30-வது நிமிடத்தில் 17-23 என்ற கணக்கில் பின் தங்கியிருந்தது. ஜெய்ப்பூர் பின்கள வீரர்கள் சிறப்பாக செயல்பட, அரியாணா ரைடர்களால், புள்ளிகளைக் கைப்பற்ற முடியவில்லை.

அதேசமயத்தில் ஜெய்ப்பூர் ரைடர் நிதின் ரவால் 35-வது நிமிடத்தில் சூப்பர் ரைடு மூலம் மூன்றுப் புள்ளிகளைக் கைப்பற்ற, அந்த அணி ஸ்கோரை சமன் செய்யும் வாய்ப்பை நெருங்கியது. பிறகு 36-வது நிமிடத்தில் அரியாணாவை ஆல் அவுட்டாக்கிய ஜெய்ப்பூர் அணி ஸ்கோரை 25-25 என்றக் கணக்கில் சமன் செய்தது.

பிறகு டேக்கிள் மூலம் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைக் கைப்பற்றின. கடைசி நிமிடத்தில் சுர்ஜீத் சிங் தனது ரைடின் மூலம் ஒரு புள்ளியைப் பெற, அரியாணா - ஜெய்ப்பூர் இடையிலான ஆட்டம் 27-27 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள அரியாணா அணி 49 புள்ளிகளைப் பெற்று "ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

அதேநேரத்தில் ஜெய்ப்பூர் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 31 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் 5-வது இடத்தில் உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios