வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது பிரித்வி ஷா செய்த செயல், 1999ல் சச்சின் செய்த செயலை நினைவுபடுத்தியது. 

அபார திறமையைக் கொண்ட வீரராக திகழும் பிரித்வி ஷா, மாடர்ன் சச்சின் என்று அழைக்கப்படுகிறார். தனது அசாத்திய பேட்டிங் திறமையால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சிறப்பாக ஆடிய பிரித்வியை சச்சினுடனும் சேவாக்குடனும் லாராவுடனும் பல முன்னாள் வீரர்கள் ஒப்பிடுகின்றனர்.

இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்தது, அபார பேட்டிங் திறமை, உயரம் என பிரித்வியிடம் உள்ள அனைத்துமே சச்சினை நினைவுபடுத்துகிறது. 

இந்நிலையில், பிரித்வி ஷாவின் செயல் ஒன்றும் சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என வென்றது. 

இந்த போட்டியில், 72 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. அப்போது, ஹோல்டர் வீசிய 5வது ஓவரின் முதல் பந்தை ஷார்ட் பிட்ச்சாக வீசினார். அந்த பந்து பவுன்சாகும் என்று கருதிய பிரித்வி, பந்தை விடும் விதமாக குனிந்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்த அளவிற்கு எழும்பாமல் நல்ல லென்த்தில் வந்ததால் பிரித்வியின் கையில் பட்டது. இந்த பந்து ஸ்டம்பில் படும் லென்த்தில் சென்றதால் ஹோல்டர் அப்பீல் செய்தார். ஆனால் அம்பயர் அவுட்டில்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து அம்பயரின் முடிவு ரிவியூ செய்யப்பட்டது. அதில், பந்து ஸ்டம்பின் மேல் இருக்கும் ஸ்டிக்கின் மேல்பகுதியில் படுவதுபோல் காட்டியதால், அம்பயரின் முடிவுக்கே விட்டுவிட்டார் மூன்றாவது அம்பயர். 

களத்தில் இருந்த அம்பயர் அவுட்டில்லை என்று கூறியதால், பிரித்வி ஷா தப்பித்தார். அதற்காக ஹோல்டரிடம் மன்னிப்பு கேட்டார் கள நடுவர் இயன் குட். 

ஹோல்டரின் பந்திற்கு பிரித்வி ஷா குனிந்தது, 1999ல் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சச்சின் டெண்டுல்கரின் செயலை நினைவுபடுத்தியது. அந்த போட்டியில் கிளென் மெக்ராத் வீசிய பந்து பவுன்சாகும் என்று கணித்து சச்சின் குனிய, பந்து சச்சின் மேல் பட்டது. அதற்கு மெக்ராத் அப்பீல் செய்ய, அம்பயர் நீண்டநேரம் யோசித்துவிட்டு அவுட் கொடுத்துவிட்டார். ரன்னே எடுக்காமல் சச்சின் வெளியேறினார். சச்சின் கணித்த அளவிற்கு பந்து எழும்பாததே அதற்கு காரணம். 

இந்த இரண்டிற்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், அந்த நிகழ்வில் சச்சின் அவுட்டாகிவிட்டார். தற்போது பிரித்வி ஷா அவுட்டாகவில்லை. அப்போதெல்லாம் ரிவியூ முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.