குகேஷை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக உருவெடுத்தது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

How Did Praggnanandha Become Number 1 Beating Gukesh?: உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் 19 வயதான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் கிளாசிக்கல் செஸ் வீரர் தரவரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷை பின்னுக்கு தள்ளி விட்டு இந்தியாவின் நம்பர் 1 வீரராக பிரக்ஞானந்தா உருவெடுத்துள்ளார். மேலும் லைவ் ரேட்டிங் மதிப்பீட்டில் உலகில் 4-வது வீரராக உயர்ந்துள்ளார்.

குகேஷை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த பிரக்ஞானந்தா

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தனது ஆட்டத்தின் தரத்தில் தான் அதிருப்தி அடைந்ததாக தெரிவித்து இருந்த பிரக்ஞானந்தா, இந்த ஆண்டு டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ், சூப்பர்பெட் செஸ் கிளாசிக் மற்றும் உஸ்செஸ் கோப்பை ஆகிய மூன்று பட்டங்களை தட்டித் தூக்கிய பிறகு இந்தியாவின் நம்பர் 1 வீரர் என்ற உச்சத்தை தொட்டுள்ளார். உலக செஸ் சாம்பியன் குகேஷை பின்னுக்கு தள்ளி விட்டு அவரை விட 1 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியாவின் நம்பர் 1 வீரராக பிரக்ஞானந்தா வந்துள்ளது சாதாரண விஷயமில்லை.

பிரக்ஞானந்தாவின் வெற்றியின் ரகசியம்

தனது வெற்றியின் ரகசியம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ள குகேஷ், தன்னம்பிக்கை மற்றும் லட்சியம் ஆகியவற்றை ஆயுதமாக கொண்டதாக தெரிவித்துள்ளார். விஜ்ஜிக் ஆன் ஜீ (Wijk aan Zee) போட்டியில் வெற்றி பெற்றது தனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்ததாகவும், குறிப்பாக தொடர்ச்சியான போட்டிகளில் குகேஷை வீழ்த்தியது இந்த தன்னம்பிக்கையை அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்ட அணுகுமுறையை மாற்றினார்

இதுதவிர பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ் அவரது ஆட்ட அணுகுமுறையை மாற்ற முக்கிய காரணமாக விளங்கினார். இதனால் பிரக்ஞானந்தா ஆட்டத்தில் புதிய அணுகுமுறைகளை கொண்டு வந்துள்ளார். ரிஸ்க் எடுக்கத் தயங்காத ஆட்டம், புதிய வகை தொடக்க ஆட்டங்களை முயற்சிப்பது போன்ற மாற்றங்கள் அவரது திறனை மேம்படுத்தியுள்ளன.

விடாமுயற்சி என்னும் ஆயுதம்

பிரக்ஞானந்தா வெற்றிக்கு அடுத்த முக்கிய காரணம் விடாமுயற்சி. தன்னிடம் வேறு எந்த மாயாஜாலமும் இல்லை என்று கூறியுள்ள அவர் ஒவ்வொரு ஆட்டத்திலும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் போராடுவதே முக்கியம் என்றும் கூறுகிறார். ஒவ்வொரு ஆட்டத்திலும் எதிராளிகளுக்கு கடும் சவால் அளித்து இறுதிவரை ஆட்டத்தை கொண்டு செல்வதே முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரக்ஞானந்தாவுக்கு உத்வேகம் அளித்த குகேஷ்

இது மட்டுமின்றி சக போட்டியாளராக இருந்தாலும் உலக அரங்கில் குகேஷின் அசாத்திய வெற்றி பிரக்ஞானந்தாவுக்கு மிகவும் உத்வேகம் அளித்தது என்றே கூறலாம். குகேஷ் கடந்த ஆண்டு டிங் லிரனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றது, இந்திய செஸ் உலகில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. மேலும் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த்தை முந்தி குகேஷ் இந்தியாவின் நம்பர் 1 இடத்தை பிடித்தது பிரக்ஞானந்தாவுக்கு தானும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவர் மனதில் அதிகமாக விதைத்தது.

தமிழ்நாட்டுக்கு பெருமை

பிரக்ஞானந்தாவின் மன உறுதியும், சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலும், ஆட்ட அணுகுமுறையில் மாற்றங்களைச் செய்து மேம்படுத்திக் கொண்ட திறனும் அவரை இந்திய செஸ் உலகின் உச்சத்தில் அமர வைத்துள்ளன. தொடர்ந்து பிரக்ஞானந்தா செஸ் உலகில் ஆதிக்கம் செலுத்தி உலகின் நம்பர் 1 வீரராக வலம் வருவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பிரக்ஞானந்தாவும், குகேஷும் உலக அளவில் செஸ்ஸில் சாதித்து தமிழ்நாட்டு பெருமை சேர்த்து வருகின்றனர். இது தொடர வேண்டும் என்பதே நமது அனைவரின் எண்ணம் ஆகும்.