இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான அணியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து வென்றது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. 

இந்த தொடரில் விராட் கோலி, ரஹானே, புஜாரா ஆகியோரை தவிர மற்ற எந்த இந்திய பேட்ஸ்மேனும் சரியாக ஆடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல், சரியாக ஆடவில்லை. 4 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே வெறும் 113 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாத முரளி விஜய் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஷிகர் தவான் இரண்டாவது டெஸ்டில் உட்கார வைக்கப்பட்டார். ஆனால் ராகுலுக்கு மட்டுமே அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்புகளை ராகுல் பயன்படுத்தி கொள்ளவில்லை. எனவே அடுத்த போட்டியில் ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. 

ஆனால் அடுத்த போட்டியிலும் ராகுல் தான் ஆடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வலைப்பயிற்சியில் ராகுல் தான் ஈடுபட்டுள்ளார். பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே கடைசி போட்டியில் ராகுல் தான் களமிறங்குவார் என்று தெரிகிறது. 

அதேபோல, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும் பாண்டியாவிற்கு பதிலாக ஹனுமா விஹாரி சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாததால், தினேஷ் கார்த்திற்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட்டிற்கு மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் ஆட வாய்ப்பு வழங்கப்பட்டது. ரிஷப் பண்ட்டும் அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. எனவே கடைசி போட்டியில் மீண்டும் தினேஷ் கார்த்திக் களமிறக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.