ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைக்க உள்ளது. இது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்களை ஆதங்கமடைய செய்துள்ளது. வலுவற்ற பேட்டிங் ஆர்டரை கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மூன்றே வீரர்கள் மட்டுமே தேறுவர் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை. ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத தற்போதைய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அந்த தொடரை இந்திய அணி கைப்பற்ற உள்ளது. சிட்னியில் நடந்துவரும் கடைசி போட்டி நாளை முடிய உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவோ அல்லது டிராவில் முடியவோ வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய அணி 2-1 என முதன்முறையாக தொடரை வென்று ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் - கவாஸ்கர் டிராபியை கைகளில் ஏந்த உள்ளது. 

இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்திய நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டிலுமே சொதப்பியது. ஆஸ்திரேலிய அணியின் அனுபவமற்ற பேட்டிங் வரிசையே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல் பவுலர்களும் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. 

உலக கோப்பைக்கு அடுத்து இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஆஷஸ் தொடர் நடக்க உள்ளது. அந்த தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வலுவும் நம்பிக்கையும் இழந்து உள்ளது. இந்தியாவுக்கு எதிரான மரண அடியிலிருந்து மீள வேண்டிய அவசியம் அந்த அணிக்கு உள்ளது. 

இந்நிலையில், தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் மூன்றே மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டும்தான் ஆஷஸ் தொடருக்கு தேறுவர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

மார்கஸ் ஹாரிஸ், கவாஜா, டிராவிஸ் ஹெட் ஆகிய மூவர் மட்டுமே அரைசதமே அடித்துள்ளனர். இவர்கள் மூவரும் ஓரளவிற்கு ஆடினர். இவர்கள் மூவரை தவிர மற்ற எந்த வீரரும் சரியாக ஆடவில்லை என்றார் பாண்டிங்.