இந்திய அணி முன்னெப்போதையும் விட வேகப்பந்து வீச்சில் சிறந்து விளங்குவதாலும் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் இல்லாததாலும் இந்திய அணி தொடரை வெல்லும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே கூட கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமான தொடராகும். வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக தோற்றுவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. அதேபோல ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவிவரும் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை வீழ்த்தி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சரிவிலிருந்து மீண்டெழும் முனைப்பில் உள்ளது. இவ்வாறு இரு அணிகளுக்குமே இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்திய அணி முன்னெப்போதையும் விட வேகப்பந்து வீச்சில் சிறந்து விளங்குவதாலும் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் இல்லாததாலும் இந்திய அணி தொடரை வெல்லும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே கூட கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் விராட் கோலி இந்த தொடரின் வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே கடந்த சுற்றுப்பயணத்தில் சிறப்பாக ஆடியதோடு, தற்போது மிகச்சிறந்த ஃபார்மில் இருப்பதால் வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும் வீரராக கோலி பார்க்கப்படுகிறார்.

ஆஸ்திரேலிய அணி ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத நிலையில், அணியை மறுகட்டமைத்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வலுவான இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்புள்ளது என்று பல ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், அவற்றையெல்லாம் தகர்க்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், இந்த தொடரில் கோலியை விட உஸ்மான் கவாஜாதான் அதிக ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதை வெல்வார். கோலி சிறந்த வீரர் தான் என்றாலும் ஆஸ்திரேலிய சூழலில் அவரை விட கவாஜா சிறப்பாக ஆடுவார்.
வெளிநாடுகளில் கோலி சிறப்பாக ஆடிவருகிறார். எனினும் மெல்போர்ன், சிட்னி மைதானங்கள் போன்று அடிலெய்டும் பெர்த்தும் இருக்காது என்பதை கோலி உணர வேண்டும். இந்த ஆடுகளங்களில் புற்கள் அதிகமிருப்பதால் வீரர்கள் எளிதாக பேட் செய்ய முடியாது. கடந்த பயணத்தின்போதும் கூட இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். அதேபோலவே இந்த முறையும் பெர்த் மற்றும் அடிலெய்ட் ஆடுகளங்களை தயார் செய்ய வேண்டும்.

ஸ்மித்தும் வார்னரும் இல்லாததால் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லும் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் இதுவரை 44 போட்டிகளில் வெறும் 5ல் மட்டும்தான் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. நான் 40 ஆண்டுகால வரலாற்றை பற்றி பேசுகிறேன். இதுவரை இந்தியா இங்குவந்து ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. எங்களுடைய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு ஆடுவார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நெருக்கடியை அளிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்திய பவுலிங்கை ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். என்னை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலிய அனி 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் என்று பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
