கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டு ஆக்ரோஷமாக ஆடி, அணியை வெற்றி பெற செய்தார். ஒரே ஓவரில் 30 ரன்களை குவித்தார் பொல்லார்டு.

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை பல்வேறு நாடுகளிலும் டி20 தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடந்து வருகிறது. 

ஷோயப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி மற்றும் பொல்லார்டு தலைமையிலான செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்கு இடையேயான போட்டியில் பொல்லார்டு அபாரமாக பேட்டிங் ஆடினார். 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கயானா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. 141 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய செயிண்ட் லூசியா அணிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 31 ரன்கள் தேவை. இந்நிலையில், 18வது ஓவரை அந்த அணியின் கேப்டன் பொல்லார்டு எதிர்கொண்டார். 

அந்த ஓவரில் அதிரடியாக ஆடிய பொல்லார்டு, 6 பந்துகளையுமே அடித்து நொறுக்கினார். முதல் மற்றும் இரண்டாவது பந்தில் சிக்ஸர்கள், மூன்றாவது பந்தில் பவுண்டரி, நான்காவது பந்தில் சிக்ஸர், ஐந்து மற்றும் ஆறாவது பந்தில் பவுண்டரிகள் என அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் விளாசி 30 ரன்களை குவித்தார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஒரு ரன் எடுத்து செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது. ஒரே ஓவரில் பொல்லார்டு 30 ரன்கள் அடித்த வீடியோ, கரீபியன் பிரீமியர் லீக்கின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

பொல்லார்டு இதேபோல ஐபிஎல்லில் ஆடி பலமுறை மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த இன்னிங்ஸ் அவருக்கு சற்று கூடுதல் சிறப்பானதுதான்.