வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த இளம் இந்திய வீரர் அமன் செராவத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த இந்திய வீரர் அமன் செராவத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வாழத்து தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரானது இன்றுடன் முடிந்து நாளை நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த 33ஆவது ஒலிம்பிக் தொடரில் இதுவரையில் நடைபெற்ற போட்டிகளின்படி, அமெரிக்கா 33 தங்கம், 39 வெள்ளி மற்றும் 39 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 111 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதே போன்று சீனா, 33 தங்கம், 26 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என்று 82 பத்க்கங்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியா இதுவரையில் 4 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் என்று 5 பதக்கங்களுடன் 67ஆவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் தான் நேற்று ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டி நடைபெற்றது. வெண்கலப் பதக்கத்திற்கான இந்தப் போட்டியில் இந்திய இளம் வீரர் அமன் செராவத், போர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த டேரியன் டோய் குரூஸை எதிர்கொண்டார். இதில், 13-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.
இதன் மூலமாக இளம் வயதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரராக அமன் செராவத் சாதனை படைத்துள்ளார். அமன் செராவத் 21 வயது 24 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக பிவி சிந்து 21 வயது ஒரு மாதம் மற்றும் 14 நாட்களில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மேலும், விஜேந்தர் சிங் 22 வயது 9 மாதம் மற்றும் 24 நாட்களில் பீஜிங் ஒலிம்பிக் தொடர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா 23 வயது 7 மாதம் மற்றும் 14 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Olympic Gold Medal Price: பாரிஸ் 2024 ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?
இதன் மூலமாக இந்தியா 5 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று மொத்தமாக 6 பதக்கங்களை கைப்பற்றி தற்போது பதக்கப் பட்டியலில் 69ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் பதக்கம் வென்ற அமன் செராவத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் சிறுது நேரம் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.