அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா, ரஷியாவின் மரியா ஷரபோவா ஆகியோர் தங்களது 4-வது சுற்றில் தோல்வியையும் இந்தியாவின் சானியா மிர்சா - சீனாவின் பெங் ஷுவாய் இணை வெற்றியையும் பெற்றனர்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஒன்றில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான கார்பைன் முகுருஸா, போட்டித் தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் செக். குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முடிவில், கிவிட்டோவா 7-6(3), 6-3 என்ற நேர் செட் கணக்கில் முகுருஸாவை வீழ்த்தினார்.

கிவிட்டோவா தனது காலிறுதியில், உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொள்கிறார்.

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா, லாத்வியாவின் அனஸ்தாஸிஜா செவஸ்டோவாவிடம் மோதினார்.

இதில் , 7-5, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் அனஸ்தாஸிஜா செவஸ்டோவாவிடம் வீழ்ந்தார் மரியா ஷரபோவா.

அனஸ்தாஸிஜா, தனது காலிறுதியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ûஸ எதிர்கொள்கிறார்.

இதர 4-வது சுற்றுகளில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ûஸ 6-4, 7-5 என்ற செட் கணக்கில் உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா வீழ்த்தினார்.

ரஷியாவின் எலினா வெஸ்னினாவை 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் கீஸும் வீழ்த்தினார்.

இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் கரீனோ பஸ்டா தனது 4-வது சுற்றில் கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவை 7-6(2), 7-6(3), 7-6(4) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

போட்டித் தரவரிசையில் 17-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் சாம் கெர்ரி 6-2, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரேவை தோற்கடித்தார்.

இதர சுற்றுகளில், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சன் 6-4, 6-3, 6-7(7), 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பாவ்லோ லாரென்ஸியை வீழ்த்தினார்,

ஆர்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேன் 7-6(3), 7-5, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் லூகாஸ் புய்லேவையும் வீழ்த்தினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - சீனாவின் பெங் ஷுவாய் இணை தனது 4-வது சுற்றில் 6-2, 3-6, 7-6(2) என்ற செட் கணக்கில் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா - ஸ்பெயினின் சாரா சொரைப்ஸ் டோர்மோ ஜோடியை வீழ்த்தினார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - கனடாவின் கேப்ரியேலா டப்ரெளஸ்கி இணை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் நிகோலஸ் மோன்ரோ - ஸ்பெயினின் மரியா ஜோஸ் இணையை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றது.