குட் நியூஸ்; இந்தியாவுக்கு சாதகமாக சிட்னி பிட்ச் ரெடி; பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் லெவன் இதோ!
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 5வது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் மற்றும் இரு அணிகளின் பிளேயிங் லெவனை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியா ஆஸ்திரேலியா 5வது டெஸ்ட்
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் மட்டும் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டிலும், மெல்போர்னில் நடந்த 4வது டெஸ்டிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்தியா ஆஸ்திரேலியான இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்க வேண்டுமானால் இந்தியா இந்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும். அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல இருக்கும் கொஞ்ச வாய்ப்பில் நீடிக்கவும் 5வது டெஸ்ட்டில் வெற்றி பெறுவது அவசியம்.
சிட்னி பிட்ச் எப்படி?
இதேபோல் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு ஆஸ்திரேலியா சென்று விடும் என்பதால் அந்த அணிக்கும் இந்த போட்டி முக்கியமானதாகும். ஆஸ்திரேலியாவில் சிட்னி மைதானத்தின் பிட்ச் இந்திய பிட்ச்களை போன்றதாகும். இந்த பிட்ச் ஸ்பின் பவுலர்களுக்கு நன்றாக கைகொடுக்கும். அத்துடன் பாஸ்ட் பவுலர்களுக்கும் சாதகமாக இருக்கும்.
பந்து நன்றாக திரும்பும் வகையிலும், கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும் வகையிலும் இருக்கும் என்று பிட்ச் தயாரிப்பாளர் கூறியுள்ளார். பந்து நன்றாக சுழன்று திரும்பும் என்பதால் இந்திய ஸ்பின் பவுலர்கள் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தருக்கு சாதகமாக இருக்கும். சிட்னி மைதானத்தில் இதுவரை 112 போட்டிகள் நடந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி 61 போட்டிகளிலும், வெளிநாட்டு அணிகள் 28 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 23 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
எத்தனை ரன்கள் சேஸ் செய்யலாம்?
முதலில் பேட்டிங் செய்த அணிகள் அதிக போட்டிகளில் (47 போட்டிகள்) வெற்றி பெற்றுள்ளது என்பதால் சிட்னி டெஸ்ட்டில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். முதலில் பேட்டிங் செய்த அணிகள் சராசரியாக 300 ரன்கள் அடித்துள்ளன. இந்த மைதானத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழந்து 705 ரன்கள் எடுத்ததே அதிகப்பட்சமாகும். குறைந்தபட்சமாக ஆஸ்திரேலியா 42 ரன்களில் அடங்கியுள்ளது. அதிபட்சமாக 188 ரன்கள் இலக்கு சிட்னி மைதானத்தில் சேஸ் செய்யப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு இருக்கா?
சிட்னி டெஸ்ட்டின் கடைசி நாளில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி இந்த 5வது டெஸ்ட்டில் மழை அச்சுறுத்தல் ஏதும் இல்லை. முதல் நாளில் மேகமூட்டமான சூழ்நிலை இருக்கும். அடுத்த மூன்று நாட்கள் நன்றாக வெயில் அடிக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போட்டி தொடங்கும் நேரம்? எதில் பார்க்கலாம்?
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 5வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்பட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் இந்த போட்டியை பார்க்கலாம். ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டுகளிக்கலாம்.
இந்திய அணி பிளேயிங் லெவன்
இந்திய அணியில் ஆகாஷ் தீப் காயம் காரணமாக விலகி விட்டதால் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அல்லது ஹர்சித் ராணா இடம்பெறலாம். மற்றப்படி பிளேயிங் லெவனில் வேறு மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது. இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா அல்லது ஹர்சித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலிய அணி பிளேயிங் லெவன்
ஆஸ்திரேலிய அணி 5வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இந்த தொடர் முழுவதும் சொதப்பி வரும் மிட்செல் மார்ஷ் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.