Personality achievement is not a matter of playing in a team - Jolan Goswami ...
ஓர் அணியாக விளையாடும் ஆட்டத்தில், தனி நபர்களின் சாதனை என்பது ஒரு விஷயமே அல்ல என்று இந்திய வீராங்கனையும், மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய உலக சாதனைப் படைத்த ஜுலன் கோஸ்வாமி கூறியுள்ளார்.
நான்கு நாடுகளைச் சேர்ந்த மகளிர் அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியில் இரு உலக சாதனைகளுடன் வெற்றி பெற்றது இந்தியா.
இதில் 181 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜுலன் கோஸ்வாமி, ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற புதிய உலக சாதனையைப் படைத்து அசத்தினார்.
இந்த நிலையில், அந்தப் போட்டிக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“ஓர் அணியாக விளையாடும் ஆட்டத்தில், தனி நபர்களின் சாதனை என்பது ஒரு விஷயமே அல்ல.
நான் சாதனைகளுக்காக விளையாடவில்லை. கிரிக்கெட்டின் மீதான எனது அதீத விருப்பத்தின் காரணமாகவே விளையாடுகிறேன்.
ஆர்வத்துடன் தொடர்ந்து விளையாடும்போது நம்மால் சாதனைகள் புரிய முடியும். அந்த வகையில் நானும் சில சாதனைகள் செய்துள்ளதை எண்ணி மகிழ்கிறேன்.
அடுத்த மாதம் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்வுள்ள நிலையில் நாங்கள் பெற்றுள்ள இந்த வெற்றி, எங்களை அதற்கான தயார் நிலையில் வைப்பதாக இருந்தது.
இந்தத் தொடர் மிகவும் கடினமானதாக இருந்தது. எனினும் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். இந்தத் தொடருக்காக ஆறு மாதங்களாக தயாராகி வந்தோம். இப் போட்டியின்போது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சிறப்பாக செயல்பட முயற்சித்ததே இத்தகைய வெற்றியை பெற உதவியாக இருந்தது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியானது முக்கியமான ஒன்று. கடினமான அந்தப் போட்டிக்கு மனதளவிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் நாங்கள் சாதனை புரிய இயலும்” என்று ஜுலன் கோஸ்வாமி கூறினார்.
