தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் செயல்பாடுகள் கோமாளித்தனமாக இருந்ததாக தென்னாப்பிரிக்க வீரர் பால் ஹாரிஸ் விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை கைப்பற்றிய ரபாடா, ஆக்ரோஷமாக கத்தியதோடு, ஸ்மித்தின் தோளில் இடித்தார். ஐசிசி விதிகளை மீறி செயல்பட்டதால், எஞ்சிய 2 போட்டிகளில் விளையாட ரபாடாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ரபாடா முறையிட்டுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க வீரர் பால் ஹாரிஸ், விராட் கோலியின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் டுவீட் செய்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலியின் செயல்பாடுகள் கோமாளித்தனமாக இருந்தன. கோலி மீது பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டும் பெயரளவுக்கு விராட் கோலி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரின் ஒழுங்கு குறைவான நடவடிக்கைக்கு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. ஆனால், ரபாடாவுக்கு 2 போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது என பால் ஹாரிஸ் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.