வண்ணமையமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது பாரிஸ் ஒலிம்பிக்ஸ் - நிறைவு விழா வீடியோ இதோ
பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகள் வண்ணமையமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்று உள்ளது.
33வது ஒலிம்பிக்ஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 26-ந் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட ஏராளமான நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் 117 பேர் கலந்துகொண்டனர். இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 16 போட்டிகளில் பங்கேற்றனர். அதில் இந்தியாவுக்கு 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் மட்டுமே கிடைத்தன.
கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி உள்பட மொத்தம் 7 பதக்கங்களுடன் 48வது இடத்தில் இருந்த இந்தியா, இந்தமுறை நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் 71வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தியாவுக்கு ஒரு தங்கம் கூட கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத்துக்கு கிடைக்க இருந்த பதக்கமும் கைநழுவிப்போனது.
இதையும் படியுங்கள்... 1 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கத்துடன் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 224 தொடரை நிறைவு செய்த இந்தியா? பட்டியலில் எந்த இடம்?
நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததால் அவர் இறுதிப்போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் பதக்கம் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கூட கிடைக்கவில்லை. இதை எதிர்த்து மேல்முறையீடும் செய்யப்பட்டு உள்ளது. அதற்கான தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இந்தியாவுக்கு சுமாரான ஒலிம்பிக்ஸாகவே இந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடர் அமைந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 17 நாட்களாக களைகட்டி வந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து பதக்கம் வென்ற 250 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்தியா சார்பில் மனு பாக்கர் தேசிய கொடியை ஏந்தியபடி அணிவகுப்பில் கலந்துகொண்டார். பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மனு பாக்கர் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 4ஆவது முறையாக சீனாவுக்கு ஆப்பு - 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் – 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம்!