ஐபிஎல் சீசன் 11-ல் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் கேப்டன்களாக உள்ள கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் வென்று சாதனை படைத்துள்ளன. தினேஷ் கார்த்திக்  மற்றும் அஸ்வின் தலைமையேற்று மெர்சல் காட்டியிருக்கும் இந்த வெற்றி தமிழர்களை தலைநிமிரச் செய்துள்ளது.

ஐபிஎல்  தொடரின் 11வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.  கோல்கட்டாவில் நடந்த 3வது லீக் போட்டியில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதின. டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

இதனையடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி டிவில்லியர்ஸ் 44 ரன்களும், மெக்குல்லம் 43 ரன்களும், மன்தீப் 37 ரன்களும் எடுத்திருந்த நிலையில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். கோல்கட்டா தரப்பில் ரானா, வினய்குமார் தலா 2 விக்கெட் கைபற்றினர்.

பின் களமிறங்கிய கோல்கட்டா அணிக்கு துவக்க வீரர் சுனில் நரேன் அதிரடி துவக்கம் தந்தார். 5 சிக்சர் 4 பவுண்டரிகளுடன் 19 பந்தில் 50 ரன்கள் குவித்தார்.  ராணா 34 ரனிகளும்,  கேப்டன் தினேஷ் கார்த்திக் 35 ரன்களும் எடுத்து  விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். முடிவில் கோல்கட்டா அணி 18.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

முன்னதாக   டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

டெல்லி அணியின் கொலின் முன்றோ, கவுதம் காம்பீர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முன்றோ 4 ரன்னில் ஆட்டமிழக்க, கவுதம் காம்பீர் நிலைத்து நின்று விளையாடினார்.

அடுத்து வந்த ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 13 ரன்னில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அரைசதம் அடித்த காம்பீர் 42 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அதன்பின் வந்த கிறிஸ் மோரிஸ் ஆட்டமிழக்காமல் 16 பந்தில் 27 ரன்கள் சேர்க்க டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 167 ரன்னகள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி 14 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது அதிரடியால் பஞ்சாப் அணி 2.5 ஓவரில் 50 ரன்னைத்தொட்டது.அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 16 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய அகர்வால் 5 பந்தில் 1 சிக்சருடன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த யுவராஜ் சிங் 22 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் 4-வது வீரராக களம் இறங்கிய கருண் நாயர் சிறப்பாக விளையாடி 33 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார்.

இருவரின் சிறப்பான அரைசதங்களால் மற்ற வீரர்கள் நிதானமாக விளையாடினார்கள். 5-வது விக்கெட்டுக்கு டேவிட் மில்லர் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் 18.5 ஓவரில் 167 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில்  எளிதாக வெற்றி பெற்றது.