pangaj shah did not get chance to play in kolkatta test

இந்திய அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் முதல் தர போட்டியில் 413 ரன்களைக் குவித்து அவுட்டாகாமல் இருந்த அசாத்திய திறமை வாய்ந்த பங்கஜ் ஷா என்ற வீரர், கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்காமல், தண்ணீர் பாட்டில் எடுத்து செல்கிறார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்சில் தடுமாறிய இந்திய அணி, 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 294 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி, சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்த ஆட்டத்தில் பங்கஜ் ஷா என்ற மேற்குவங்கத்தைச் சேர்ந்த வீரர், களத்தில் விளையாடும் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில், கூல்டிரிங்ஸ் ஆகியவற்றை எடுத்து செல்கிறார்.

தற்போது தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லும் பங்கஜ் ஷாவிற்கு 29 வயது. பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் முதல் தர போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.

முதல் தர கிளப் போட்டி ஒன்றில், 44 பவுண்டரி, 23 சிக்ஸர்களுடன் 413 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். அன்று அனைத்து பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகிய பங்கஜ் ஷா, இன்று தண்ணீர் எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறார்.

அசாத்திய திறமை கொண்ட பங்கஜ் ஷாவிற்கு தற்போதே 29 வயதாகிவிட்டது. அவருக்கு உடனடியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டாலே அதிகபட்சம் 5 முதல் 6 ஆண்டுகள் வரைதான் விளையாட முடியும். ஆனால் இப்போதும் கூட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அதைவிட மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், சொந்த ஊரான கொல்கத்தாவில் களம்காண வேண்டும் என்ற கனவோடு இருந்த அந்த திறமைசாலிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மைதானத்துக்குள் அவர் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்லும்போது, அவரையும் அவரது திறமையையும் நன்கு அறிந்த கொல்கத்தா ரசிகர்கள் கலங்குகின்றனர்.