Pakistani defeated srilanka

இலங்கைக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதன்மூலம் ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி இலங்கையை வொயிட்வாஷ் செய்தது.

இலங்கை - பாகிஸ்தான் அணிகளிடையே 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் நேற்று நடைப்பெற்றது.

இதில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணியில் திசர பெரேரா எடுத்த 25 ஓட்டங்களே அதிகபட்சமாகும்.

திரிமானி 19 ஓட்டங்கள், சீகுகே பிரசன்னா 16 ஓட்டங்கள், துஷ்மந்தா சமீரா 11 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கேப்டன் உபுல் தரங்கா, சிறிவர்தனா, வான்டர்சே ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

சமரவிக்ரமா, சண்டிமல், டிக்வெல்லா ஆகியோர் டக் அவுட் ஆகினர். ஃபெர்னான்டோ 7 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் கான் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹசன் அலி, ஷாதாப் கான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து, ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான இமாம் உல் ஹக் - ஃபகார் ஸமான் இணை அற்புதமாக ஆடி அணியை வெற்றிக்கு நெருக்கமாக கொண்டு சென்றது. எனினும், 47 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஃபகார் ஸமான் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஃபஹீம் அஷ்ரஃப் துணையுடன், அணியை வெற்றி பெறச் செய்தார் இமாம் உல் ஹக். அவர் 64 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 45 ஓட்டங்களுடனும், ஃபஹீம் அஷ்ரஃப் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை தரப்பில் வான்டர்சே ஒரு விக்கெட் எடுத்தார்.

பாகிஸ்தானின் உஸ்மான் கான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்த வெற்றியின்மூலம் ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி இலங்கையை வொயிட்வாஷ் செய்தது.