Junior Hockey World Cup 2025: தமிழகத்தில் நடக்கும் ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணி விலகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவிருந்த ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகுவதாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) உறுதிப்படுத்தியுள்ளது. ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பை தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரையில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் விலகல்

''2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள FIH ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கு ஆரம்பத்தில் தகுதி பெற்ற பாகிஸ்தான் ஹாக்கி அணி, இறுதியில் பங்கேற்காது என்று பாகிஸ்தான் ஆக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று ச‌ர்வதேசஆக்கி கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு பதிலாக மாற்று அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு பதிலாக மாற்று அணி எது?

ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பையில் இந்தியா, சிலி மற்றும் சுவிட்சர்லாந்துடன் பாகிஸ்தான் அணி பி பிரிவில் இடம்பெற்றிருந்தது. இப்போது பாகிஸ்தான் விலகியதால் அதற்கு பதிலாக வேறு ஒரு அணி இடம்பெறும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் எல்லை மோதல்கள் காரணமாக பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக நிறுத்திக் கொண்டது.

ஆசிய கோப்பையில் இந்திய வீரர்கள் பதிலடி

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவோ அல்லது நட்பு பாராட்டவோ முன்வராமல், இந்திய வீரர்கள் விலகியே இருந்தனர். டாஸுக்குப் பிறகு வழக்கமான கைகுலுக்கலைத் தவிர்த்த இரு அணி கேப்டன்களும் போட்டி முடிந்த பின்னரும் வழக்கமான கைகுலுக்கலுக்கு முன்வரவில்லை.

பாகிஸ்தான் அமைச்சர் செய்த செயல்

ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்த நாட்டின் அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு கோப்பையை வழங்க மறுத்த மொஹ்சின் நக்வி, ஆசிய கோப்பையுடன் பாகிஸ்தானுக்கு சென்றார். அதன்பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திடம் கோப்பையை ஒப்படைத்தார். ஆனால் நான் தான் இந்திய அணியிடம் கோப்பையை வழங்குவேன் என பாகிஸ்தான் அமைச்சர் இன்னும் பிடிவாதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.