ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டி பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று நடக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று ஆடிவருகின்றன.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளையும் சூப்பர் 4 சுற்றில் வீழ்த்தியுள்ள இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இரு அணிகளிடமும் தோல்வியை தழுவிய ஆஃப்கானிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறியது. இந்நிலையில் இந்தியா ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டி நேற்று டிராவில் முடிந்தது. இந்த போட்டி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத போட்டி.

இன்று பாகிஸ்தானும் வங்கதேசமும் மோதுகின்றன. இரு அணிகளுமே இந்தியாவிடம் தோற்று, ஆஃப்கானிஸ்தானிடம் வெற்றி பெற்றுள்ளன. எனவே இறுதி போட்டிக்கு தகுதி பெறப்போவது எந்த அணி என்பதை தீர்மானிக்கும் போட்டி இதுவாகும். எனவே இரு அணிகளுமே இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதிபெறும் முனைப்பில் உள்ளன. 

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் தொடங்குகிறது.