பிரிஸ்பேன்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் போராடித் தோற்றுள்ளது.

பரபரப்பாக நடந்துமுடிந்த இந்த டெஸ்ட் போட்டியில் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

இரு அணிகளுக்கு இடையே கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 130.1 ஓவர்களில் 429 ஓட்டங்கள் குவித்தது.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 55 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலியா, 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பின்னர், 490 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு தனது 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான், 4-வது நாள் ஆட்டநேர முடிவில், 123 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 382 ஓட்டங்கள் எடுத்தது. சதம் கடந்த ஆஸாத் ஷபிக் 100, யாசிர் ஷா 4 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்கள். 

வெற்றி பெறுவதற்கு இன்னும் 108 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில், பாகிஸ்தான் வசம் 2 விக்கெட்டுகளே இருந்தன. ஆனாலும் கடைசி நாளான இன்று ஆஸாத் - யாசிர் ஷா ஆகிய இருவரும் மனஉறுதியுடன் ஆடினார்கள். இதனால் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு மிக அருகில் செல்லும் நிலை உருவானது.

பரபரப்பான கட்டத்தில், 137 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருந்த ஆஸாத்தை அற்புதமான பந்தினால் வீழ்த்தினார் ஸ்டார்க். இதன்பின்னர் யாசிர் ஷா 33 ஓட்டங்களில் ரன் அவுட் ஆகி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

கடுமையாகப் போராடி 450 ஓட்டங்கள் குவித்தாலும் பாகிஸ்தான் அணியால் வெற்றியை நெருங்கமுடியாமல் போனது. 

தோற்றுப்போய்விடும் நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி இறுதியில் 39 ஓட்டங்களில் வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.