ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 373 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 1-0 என டெஸ்ட் தொடரை வென்றது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி டிராவில் முடிந்தது. அபுதாபியில் இரண்டாவது போட்டி நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 282 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

137 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி அபாரமாக பேட்டிங் செய்து 400 ரன்களை குவித்தது. இதையடுத்து 537 ரன்கள் முன்னிலை பெற்றது பாகிஸ்தான் அணி.

538 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஃபின்ச் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 30 ரன்களுக்கு மேல் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மார்னஸ் மட்டுமே நீண்ட நேரம் களத்தில் நின்று 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் அபாரமாக பந்துவீசி இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 5 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து பாகிஸ்தான் அணி 373 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என பாகிஸ்தான் அணி வென்றது. இந்த தொடரில் அபாரமாக பந்துவீசிய முகமது அப்பாஸ், இரண்டாவது போட்டிக்கான ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர்நாயகன் விருது ஆகிய இரண்டையும் வென்று அசத்தினார்.