ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஆஃப்கானிஸ்தான் அணியை போராடி கடைசி ஓவரில் வென்றது பாகிஸ்தான் அணி. 

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக ஆடிவருகிறது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே அபாரமாக ஆடி எதிரணிக்கு சவால் விடுக்கிறது. எதிரணிக்கு வெற்றியை எளிதாக கொடுத்துவிடுவதில்லை ஆஃப்கானிஸ்தான். 

லீக் சுற்றில் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளையுமே வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தானை எளிதாக வெற்றி பெறவிடவில்லை. வெற்றிக்காக பாகிஸ்தானை இறுதி வரை போராடவிட்டது ஆஃப்கானிஸ்தான். 

முதலில் பேட்டிங் செய்து 250 ரன்களை கடந்துவிட்டால் போதும்; எதிரணியை வீழ்த்திவிடலாம் என்ற நம்பிக்கையில் ஆஃப்கானிஸ்தான் அணி உள்ளதை ஒவ்வொரு போட்டியும் காட்டுகிறது. 250 ரன்களுக்கு மேல் எடுத்துவிட்டாலே முஜீபுர் ரஹ்மான், ரஷீத் கான் ஆகியோரை வைத்து எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கிறது ஆஃப்கானிஸ்தான். 

அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 94 ரன்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் அந்த அணியின் ஷாகிடி மற்றும் கேப்டன் அஸ்கர் ஆகிய இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தனர். 64 ரன்கள் எடுத்து கேப்டன் அஸ்கர் அவுட்டானார். அதன்பிறகும் சிறப்பாக ஆடிய ஷாகிடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்தார். 50 ஓவர் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. 

258 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமானை முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் முஜீபுர் ரஹ்மான். அதன்பிறகு இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் ஜோடி 154 ரன்களை குவித்தது. இருவருமே அரைசதம் கடந்தனர். 80 ரன்கள் குவித்த இமாம் உல் ஹக் ரன் அவுட்டாக, அடுத்த சில நிமிடங்களில் பாபர் அசாமை வீழ்த்தினார் ரஷீத் கான். 66 ரன்கள் குவித்த பாபர் அசாம், ரஷீத் கானின் பந்தில் வீழ்ந்தார். 

அதன்பிறகு சொஹைல் 13 ரன்களிலும் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அனுபவ வீரரான ஷோயப் மாலிக் நிதானமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அஃப்டப் வீசிய அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸரும் மூன்றாவது பந்தில் பவுண்டரியும் விளாசி அணியை வெற்றி பெற செய்தார் மாலிக். அவரும் அரைசதம் கடந்தார். இதையடுத்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.