ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்ற பிறகு, பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர் ஷோயப் மாலிக்கின் செயல், லட்சக்கணக்கான இதயங்களை வென்றுள்ளது. 

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன. இதில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இந்தியா - வங்கதேசம் இடையேயான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 257 ரன்கள் எடுத்தது. 258 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் முதல் ஓவரிலேயே விழுந்துவிட்டது. இதையடுத்து இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தது. அதன்பிறகு அவர்கள் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுபடியும் அந்த அணி விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. பாகிஸ்தான் அணிக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தது ஆஃப்கானிஸ்தான் அணி.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அனுபவ வீரர் ஷோயப் மாலிக் நிலைத்து நின்று ஆடி, அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். இரு அணிகளுமே வெற்றிக்கு கடுமையாக போராடின. கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அஃப்டாப் வீசிய கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸரும் மூன்றாவது பந்தில் பவுண்டரியும் விளாசிய மாலிக், பாகிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். 

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொள்ளும்போது, கடைசி ஓவரை வீசிய ஆஃப்கானிஸ்தான் வீரர் அஃப்டாப் மைதானத்தில் மண்டியிட்டு உடைந்து அழுதார். அவர் அழுததைக் கண்ட மாலிக், அவருக்கு அருகில் மண்டியிட்டு அவருக்கு ஆறுதல் கூறி அழைத்து சென்றார். போட்டியில் வெற்றி தோல்வி ஒருபுறமிருக்க, எதிரணி வீரரையும் அரவணைத்து அழைத்து சென்ற மாலிக்கின் செயல் கிரிக்கெட் ரசிகர்களை கடந்து லட்சக்கணக்கான இதயங்களை வென்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 

ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்த இடத்திற்கே வந்து தோனியிடம் மாலிக் பேசிவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.