பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஃபெர்குசன் வீசிய பவுன்சரில் நிலைகுலைந்து பாதியில் களத்திலிருந்து வெளியேறினார். 

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதில் டி20 தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது பாகிஸ்தான். இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடர் நடந்துவருகிறது. 

இதன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் ரோஸ் டெய்லர் மட்டுமே சிறப்பாக ஆடி 86 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

210 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 41வது ஓவரிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸின்போது 13வது ஓவரை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஃபெர்குசன் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை பவுன்சராக வீசினார். ஃபெர்குசன் வீசிய பவுன்சர் பந்து, இமாம் உல் ஹக்கின் ஹெல்மெட்டில் பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்த இமாம் உல் ஹக், ஹெல்மெட்டை கழட்டிவிட்டு மைதானத்தில் படுத்துவிட்டார். அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. பின்னர் மருத்துவர்கள் வந்து இமாமை பரிசோதித்துவிட்டு அழைத்து சென்றனர். அதனால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். 

பின்னர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு ஸ்கேன் செய்து அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்த பிறகு அவருக்கு ஒன்றும் பிரச்னையில்லை, நன்றாக இருக்கிறார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.