சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா ஒரே பிட்ச்சில் விளையாடுவதாக பாகிஸ்தான் பயிற்சியாளர் ஆகிப் ஜாவேத் குற்றம்சாட்டியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டதால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்து வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிவாகை சூடியது.
அதே வேளையில் இந்திய அணி அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவதால் ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினார்கள். துபாயில் விளையாடுவதால் இந்திய அணிக்கு கிடைக்கும் நன்மை குறிப்பிடத்தக்கது என்றும், ஏற்கனவே வலுவான அணியை ஒரே இடத்தில் விளையாடுவதன் மூலம் அது பலப்படுத்துகிறது எனவும் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்து இருந்தார்.
இதேபோல் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் இந்தியா அணி ஒரே பிட்ச்சில் விளையாடுவது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் பயிற்சியாளர் ஆகிப் ஜாவேத்தும் இந்த விவகாரத்தில் இந்தியா மீது பாய்ந்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''துபாயில் விளையாடுவதன் மூலம் இந்தியா நிச்சயமாக அனைத்து போட்டிகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. அவர்கள் ஒரே மைதானத்தில் விளையாடி ஒரே ஹோட்டலில் தங்குகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் தோல்விக்கு இதை காரணமாக சொல்லவில்லை'' என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானை பொறுத்தவரை நியூசிலாந்து, இந்தியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. படுதோல்வியை மறைப்பதற்காக இப்படி இந்தியா மீது பாகிஸ்தான் பயிற்சியாளர் சாக்குப்போக்கு சொல்வதாக இந்திய ரசிகர்கள் ஆகிப் ஜாவேத்தை வறுத்தெடுத்து வருகின்றனர். பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி விளையாடும் அணிகள் ராவல்பிண்டி, லாகூர், கராச்சி என மூன்று விதமான பிட்ச்களில் விளையாடுகின்றனர். ஆனால் இந்தியா துபாயில் ஒரே பிட்ச்சில் விளையாடுகிறது.
ஒவ்வொரு மைதானங்களின் பிட்ச்சும் ஒவ்வொருவிதமாக இருக்கும். ஆகையால் அந்த பிட்ச்களுக்கு ஏற்ப வீரர்கள் தங்களின் ஆட்டத்திறனை மாற்றிக் கொள்வது அவசியம். ஆனால் ஒரே பிட்ச்சில் விளையாடும்போது அடுத்த ஆட்டத்திலும் பிட்ச் இப்படித்தான் இருக்கும் என்பதை கணித்து விடலாம். இது அடுத்த போட்டிகளை எதிர்கொள்வதற்கு இந்தியாவுக்கு உதவியாக இருக்கும். ஆனால் இந்தியாவுடன் மோதும் மற்ற அணிகளுக்கு துபாய் பிட்ச் புதுசு என்பதால் பெரும் சவாலாக இருக்கும். இதனால்தான் இந்தியாவுக்கு சாதகமாக பிட்ச் உள்ளது என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
