20 ஓவர் போட்டிகளில் விராட் கோலி படைத்திருந்த சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அதிரடியாக முறிடியத்துள்ளார். 20 ஓவர் போட்டிகள் மட்டும் அல்லாமல் ஒரு நாள், டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளிலும் ரன் மெசின் என்று அழைக்கப்படுபவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் 20 ஓவர் போட்டிகளில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளார். 

அதில் குறிப்பிடத்தக்க சாதனை மிக குறைந்த போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்தவர் என்பது தான். அதாவது 27 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 1000 ரன்களை கடந்து கோலி சாதனை படைத்திருந்தார். 
 
கோலியின் இந்த சாதனையை தான் தற்போது பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் ஆஷம் உடைத்துள்ளார். நேற்று நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளில் களம் இறங்கிய பாபர் ஆஷம் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அந்த அணி வீரர்களின் பந்தை நாலாபுறமும் சிதறடித்து ரன்களை குவித்தார். 58 பந்துகளில் 79 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கும் உதவினார்.

இந்த போட்டியில் 48 ரன்கள் எடுத்த போது கோலியின் சாதனையை பாபர் முறியடித்தார். அதாவது தனது 26வது 20 ஓவர் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார் பாபர். விராட் கோலி ஆயிரம் ரன்களை கடக்க 27 போட்டிகள் தேவைப்பட்ட நிலையில் 26 போட்டிகளில் பாபர் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் மிக விரைவாக ஆயிரம் ரன்களை கடந்தவர் என்கிற சாதனையை பாபர் படைத்துள்ளார்.

 

ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளில் மிக விரைவாக ஆயிரம் மற்றும் 2000 ரன்களை கடந்த வீரர்களில் 2வது இடத்தில் பாபர் உள்ளார். மேலும் ஒரு நாள் போட்டிகளில் முதல் 25 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்கிற பெருமைக்கும் பாபர் சொந்தக்காரராக உள்ளார். தற்போது கோலியின் சாதனையை முறியடித்ததன் மூலம் உலக ரசிகர்களின் கவனம் பாபர் ஆசம் மீது திரும்பியுள்ளது.