Our team won the award because we gave full freedom to the bowlers - Rohit Sharma

பந்துவீச்சாளர்களுகு முழுச் சுதந்திரம் கொடுத்ததால்தான் எங்கள் அணி வெற்றி பெற்றது என்று மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

ஐதராபாதில் நடைபெற்ற 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புணேவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த ஓவரை வீசிய மிட்செல் ஜான்சன், மனோஜ் திவாரி, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை வீழ்த்தியதோடு, 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.

ஆட்டம் முடிந்த பிறகு வெற்றி குறித்து ரோஹித் சர்மா கூறியது:

“ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். கடைசி 3 ஓவர்களில் புணேவின் வெற்றிக்கு 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அந்தத் தருணத்திலும் எங்கள் பந்துவீச்சாளர்கள் வெற்றி தேடித்தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

இதற்கு முன்னர் விளையாடிய ஆட்டங்களில் இக்கட்டான தருணங்களில் அவர்கள் சிறப்பாக பந்துவீசி வெற்றி தேடித் தந்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டேன். நீங்கள் நினைப்பதை செயல்படுத்துங்கள். அதற்கேற்றவாறு பீல்டிங்கை அமைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டேன்.

இந்த இறுதி ஆட்டம், மிகச்சிறந்த ஆட்டமாகும். இது ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக அமைந்திருக்கும். 129 ரன்கள் என்ற எளிதான இலக்கை எட்டவிடாமல் புணேவை சுருட்டியிருப்பது மிக அற்புதமான முயற்சியாகும். இதற்குமேல் பந்துவீச்சாளர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது.

இதுபோன்ற குறைவான ரன்களை சேர்த்துவிட்டு, அதில் வெற்றி பெற வேண்டுமானால், அதற்கு முதலில் நம்பிக்கை தேவை. நாங்கள் பீல்டிங் செய்ய களமிறங்கும்போது, கொல்கத்தாவையே 105 ரன்களுக்கு சுருட்டியிருக்கிறோம். அதனால் புணேவையும் சுருட்ட முடியும் என கூறினேன்” என்று கூறினார்.