மறுசுழற்சி முறையில் பழைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர மின்னணு பொருள்களின் உலோகங்களில் இருந்து 2020-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள், தயாரிக்கப்பட உள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் முயற்சியாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, டோக்கியோ ஒலிம்பிக்கின் செய்தித் தொடர்பாளர் ஹிகாரிகோ ஒனோ, “டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள், மறுசுழற்சி முறையில் பழைய செல்லிடப்பேசிகள், மின்னணு பொருள்களின் உலோகங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட உள்ளன. இது, நிலைத்தன்மை மற்றும் பொது மக்கள் பங்களிப்புக்கான அடையாளமாகவும் இருக்கும்.
எனினும், ஒரு சில பதக்கங்களை மட்டும் அவ்வாறு தயாரிப்பதா அல்லது ஒட்டுமொத்த பதக்கங்களையும் மறுசுழற்சி முறையில் தயாரிப்பதா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
கடந்த 2010-ஆம் ஆண்டு வான்கூவரில் நடைபெற்ற போட்டியிலிருந்தே, மறுசுழற்சி முறையிலான பதக்கங்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக, தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களே மறுசுழற்சி செய்யப்பட்ட உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
சமீபத்தில் நிறைவடைந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் கூட, அத்தகைய பதக்கங்கள் செய்யப்பட்டிருந்தன” என்று ஹிகாரிகோ ஒனோ கூறினார்.
