'எனது உணவில் விஷம் கலக்கப்பட்டது'; ஜோகோவிச் பகீர் குற்றச்சாட்டு; நடந்தது என்ன?

ஆஸ்திரேலியாவில் தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாக பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் குற்றம்சாட்டியுள்ளார். 

Novak Djokovic has alleged that his food was poisoned in Australia ray

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

உலகப்புகழ்பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வரும் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெறுகிறது. இந்த புதிய ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இதுதான். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஆடவர் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 10 முறை சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

உணவில் விஷம் கலக்கப்பட்டது 

இந்நிலையில், கடந்த கடந்த 2002ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் வைத்து தனது உணவில் விஷம் கலக்கப்பட்டது என்று நோவாக் ஜோகோவிச் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். அதாவது கடந்த 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக, ஜோகோவிச் மெல்போர்ன் விமான நிலையம் சென்றார். அப்போது கொரொனா தொற்று வேகமாக பரவிய நிலையில் ஆஸ்திரேலியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டு இருந்தன. 

ஜோகோவிச்சிவிடம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாததால் அவர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் கொரொனா தடுப்பூசியும் போடவில்லை என கூறப்படுகிறது. இதனால் மேலும் ஒரு சில நாட்கள் ஆஸ்திரேலிய ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்த அவர் பின்பு நாட்டில் இருந்தே வெளியேற்றப்பட்டார்.

பழைய சம்பவம் அகலவில்லை 

அப்போது தான் தனது உணவில் விஷம் வைக்கப்பட்டதாக ஜோகோவிச் இப்போது குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், '''எனக்கு உடலில் சில பிரச்னைகள் இருந்தன. மெல்போர்னில் நான் தங்கியிருந்த ஹோட்டலில் எனக்கு விஷத்தன்மை கொணட உணவு வழங்கப்பட்டது. அதனால்தான் நான் நோய்வாய்ப்பட்டேன். அப்போது கடும் காய்ச்சலால் அவதிப்பட்டேன்.

நான் செர்பியாவுக்குத் திரும்பி வந்தபோது தான் உணவில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செர்பியாவில் நடத்தபட்ட சோதனையில் எனது ரத்தத்தில் ஈயம், பாதரசம் உள்ளிட்டவை அதிகப்படியாக இருந்தது தெரியவந்தது. ஆனால் நான் அப்போது இந்த விஷயம் குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. அதன்பின்பு நான் ஆஸ்திரேலியா வந்தபோதும் பழைய சம்பவம் எனது மனதை விட்டு அகலவில்லை. 

ஆஸ்திரேலியா மீது கோபம் இல்லை 

அண்மையில் பாஸ்போர்ட் பரிசோதனைக்கு சென்றபோது பழைய சம்பவங்கள் எனது மனதில் வேதனையை உண்டாக்கியது. ஆனால் எனக்கு ஆஸ்திரேலியா மீதும், மெல்பர்ன் மீதும் எந்த கோபமும் இல்லை. இப்போது நிலைமை முழுமையாக மாறி விட்டது'' என்றார். ஜோகோவிச்சின் இந்த குற்றச்சாட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோகோவிச்சின் குற்றச்சாட்டுக்கு ஆஸ்திரேலியா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios