இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. இந்திய அணிக்காக பல கோப்பைகளையும் முக்கியமான தொடர்களையும் வென்று கொடுத்த தோனி, இன்றைக்கு ஃபார்மில்லாமல் தவித்துவருகிறார்.

கடந்த ஓராண்டுக்கு மேலாகவே சரியான பேட்டிங் ஃபார்மில்லாமல் தவித்துவரும் தோனி பல விமர்சனங்களுக்கு ஆளானார். அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐபிஎல்லில் அபாரமாக ஆடினார். அதனால் இனிமேல் தோனி சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதன்பின்னர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினார்.

அவரது பேட்டிங் அண்மைக்காலமாகவே மந்தமாக இருக்கிறது. எனவே அவரது ஃபார்மை கருத்தில் கொண்டு அவரது ஓய்வு குறித்த கருத்துகளை பலரும் தெரிவித்துவருகின்றனர். ஆனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையில் தோனியின் அனுபவமும் அவரது விக்கெட் கீப்பிங்கும் அணிக்கு தேவை என்பதால் அதுவரை கண்டிப்பாக தோனி ஆடுவார்.

ஆனால் அதேநேரத்தில் டி20 அணியிலிருந்து தோனி ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை அடுத்த ஆண்டு நடக்க உள்ளதால் அதில் தோனி ஆடவேண்டும் என்பதற்காக ஒருநாள் அணியில் உள்ளார். ஆனால் 2020ம் ஆண்டு நடக்க உள்ள டி20 உலக கோப்பை வரை தோனி ஆடுவது சந்தேகம் என்பதால் அவரது இடத்திற்கு ரிஷப் பண்ட்டை தயார்படுத்தும் விதமாக இப்போதே டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டார் தோனி. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் தோனி இல்லை.

தோனியின் ஓய்வு குறித்த விவாதங்கள் நடந்துவரும் நிலையில், தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி. தோனியின் ஓய்வு குறித்து பேசிய அஃப்ரிடி, இந்திய அணிக்காக தோனி செய்திருக்கும் அளவு பங்களிப்பை யாருமே செய்ததில்லை. எனவே தோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று கருத்து கூற யாருக்குமே உரிமையில்லை. 2019 உலக கோப்பையில் தோனி ஆடுவது இந்திய அணிக்கு நன்மை பயக்கும் என்று அஃப்ரிடி அதிரடியாக தெரிவித்துள்ளார்.