நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் கொழும்பில் இன்று மோதுகின்றன.

நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியைப் பொருத்தவரையில், ஆறு மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, முகமது சிராஜ் உள்ளிட்ட இளம் வீரர்கள் அணியில் இணைந்துள்ளனர். 

அடுத்தாண்டுஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால், அணியில்  தங்களுக்கான வாய்ப்பை உறுதி செய்ய அவர்களுக்கு இந்தத் தொடர் ஒரு சோதனைப் போட்டியாக இருக்கும். 

இது டி20 போட்டியாக இருந்தாலும், வீரர்களின் திறமையை தேர்வாளர்கள் ஆய்வு செய்ய இதுவொரு வாய்ப்பான களமாகும். வீரர்களைப் பொருத்த வரையில், கேப்டன் ரோஹித் சர்மா, தவனுடன் இணைந்து அணிக்கு அவர் நல்லதொரு தொடக்கத்தை ஏற்படுத்தலாம். 3-வது வீரராக வரும் சுரேஷ் ரெய்னா, ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறார். 

லோகேஷ் ராகுல் 4-ஆவது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. ஆனால், அந்த இடத்தில் மணீஷ் பாண்டே தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தினேஷ் கார்த்திக் 5-ஆவது வீரராக களமிறங்கும் பட்சத்தில், 6-ஆவது இடத்தில் தீபக் ஹூடா அல்லது ரிஷப் பந்த் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புள்ளது.

பந்துவீச்சைப் பொருத்த வரையில் வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல் சுழற்பந்துவீச்சிலும், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட் வேகப்பந்துவீச்சிலும் பங்களிப்பு செய்ய உள்ளனர். கூடுதல் சுழற்பந்துவீச்சாளரை தேர்வு செய்தால், அக்ஸர் படேல் களமிறங்குவார்.

இலங்கை அணியைப் பொருத்த வரையில், கடந்த சுற்றுப் பயணத்தில் இந்தியா அந்த அணியை 9-0 என ஒயிட்வாஷ் செய்திருந்தாலும், தற்போது அந்த அணி மேம்பட்டுள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்றுள்ளதால் அந்த அணி நம்பிக்கையுடன் களமிறங்கும்.

தினேஷ் சண்டிமல் தலைமையிலான இலங்கையின் பேட்டிங் வரிசைக்கு உபுல் தரங்கா, குசல் மென்டிஸ் உள்ளிட்டோரும், பந்துவீச்சில் லக்மல், சமீரா, தனஞ்ஜெயாவும் பலம் சேர்க்கின்றனர்.

இந்திய அணியின் விவரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அக்ஸர் படேல், விஜய் சங்கர், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ், ரிஷப் பந்த்.

இலங்கை அணியின் விவரம்: 

தினேஷ் சண்டிமல் (கேப்டன்), சுரங்கா லக்மல், உபுல் தரங்கா, தனுஷ்கா குணதிலகா, குசல் மென்டிஸ், டாசன் ஷனகா, குசல் பெரேரா, திசர பெரேரா, ஜீவன் மென்டிஸ், இசுரு உதனா, அகிலா தனஞ்ஜெயா, அமிலா அபோன்சோ, நுவான் பிரதீப், துஷ்மந்தா சமீரா, தனஞ்ஜெய டி சில்வா.