குத்துச்சண்டை போட்டியில் நிஷாந்த் தேவ் அதிர்ச்சி தோல்வி – பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேற்றம்!
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நள்ளிரவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ் தோல்வி அடைந்து வெளியேறினார்.
பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா தொடங்கி 8 நாட்கள் முடிந்த நிலையில் 9ஆவது நாளுக்கான போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில், இந்தியா ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், கோல்ஃப், குத்துச்சண்டை, தடகளம், பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்கிறது. ஒலிம்பிக் 2024 தொடரில் இந்தியா இதுவரையில் 3 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. ஒலிம்பிக் 2024 பதக்க பட்டியலில் அமெரிக்கா 61 பதக்கங்களும், பிரான்ஸ் 41 பதக்கங்களும், சீனா 37 பதக்கங்களும், இங்கிலாந்து 33 பதக்கங்களும் கைப்பற்றியுள்ளன.
இந்தியா பதக்கப் பட்டியலில் 53ஆவது இடத்தில் உள்ளது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் நீச்சல், டென்னிஸ், வில்வித்தை, குதிரையேற்றம், ரோவிங் என்று அனைத்திலும் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த நிலையில் தான், நள்ளிரவில் நடைபெற்ற குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ், மெக்சிகோவின் மார்கோ வெர்டேவை எதிர்கொண்டார். இதில், நிஷாந்த் தேவ் 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதக்கம் இல்லாமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.
இன்று பிற்பகல் 3.02 மணிக்கு மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிப் போட்டியில் லோவ்லினா போர்ஹகைன் சீனாவின் லி குயானை எதிர்கொள்கிறார்.