Nilgiri youngsters in Indian team of soccer competition

மினி உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் அணியில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் இடம் பெற்றுள்ளனர். 

தமிழ்நாடு மினி கால்பந்து சங்கத் தலைவர் ராமன் ரகுநாத் நீலகிரி மாவட்டம், உதகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.

அதில், “மினி உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி அக்டோபர் 6 முதல் 15-ஆம் தேதி வரை துனீஷியாவில் நடைபெறுகிறது. இதில், 24 நாடுகள் கலந்து கொள்கின்றன. அவை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.

இதில் குரூப் டி பிரிவில் அமெரிக்கா, ஸ்பெயின், செனகல், இந்தியா ஆகிய நான்கு நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் செனகல் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. 

மினி உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், ஒவ்வொரு அணியிலும் தலா ஆறு வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டு விளையாடுவர். இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் தோடர் இனத்தைச் சேர்ந்த நார்தே குட்டன், நஸ்முடி குட்டன் ஆகியோருடன் படகர் இனத்தைச் சேர்ந்த சரண் பாபுவும் இடம் பெற்றுள்ளார்.

இவர்கள் மூவருமே உதகையில் உள்ள மீக்கேரி ஸ்போர்ட்ஸ் அகாதெமியின் விளையாட்டு வீரர்கள்” என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.

இவர்களுக்கு மக்கள் மத்தியிலும், கால்பந்து ரசிகர்கள் மத்தியிலும் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிகின்றன.