New Zealands chief coach leaves Mike Hesson Why

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான மைக் ஹெஸ்சன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 2012–ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இருந்து வந்தவர் மைக் ஹெஸ்சன் (43). தற்போது இவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். ஜூலை 31–ஆம் தேதியுடன் பணியில் இருந்து விடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

50 ஓவர்உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு குறைவான நாட்களே இருக்கும் நிலையில் மைக் ஹெஸ்சன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைக் ஹெஸ்சன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு, "பயிற்சியாளர் பதவியில் 100 சதவீத அர்ப்பணிப்புடன் முழு நேரத்தையும் செலவிட வேண்டியது அவசியமானதாகும். 

எனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவதால் அடுத்த 12 மாதத்துக்கு பயிற்சியாளர் பதவியில் இருக்க நான் விரும்பவில்லை. அடுத்த 12 மாதத்துக்கு அணிக்கு என்ன தேவை என்பது எனக்கு தெரியும். அதற்கு நான் தகுதியானவர் இல்லை என்று கருதுவதால் விலகல் முடிவை எடுத்தேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.