வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 3-0 என முழுமையாக தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது.  முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச தீர்மானித்தது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்தில் தொடக்க வீரராக வந்த கேப்டன் வில்லியம்ஸன் அரைசதம் கடந்து 60 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். உடன் வந்த ஜேம்ஸ் நீஷம் 15 ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.

காலின் மன்ரோ டக் அவுட்டாக, டாம் புரூஸ் 5 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கோரே ஆண்டர்சன் சிறப்பாக ஆடி ஓட்டங்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களை எட்டியது

நியூசிலாந்து. ஆண்டர்சன் 94, காலின் டி 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

வங்கதேச தரப்பில் ரூபெல் ஹொஸன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து ஆடிய வங்கதேசத்தில் செளம்யா சர்கார் (42 ஓட்டங்கள்), ஷாகிப் அல் ஹசன் (41 ஓட்டங்கள்) மட்டும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதர வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 எடுத்தது வங்கதேசம்.

நூருல் ஹசன் 7, ரூபெல் ஹொஸன் 1 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

நியூசிலாந்து தரப்பில் போல்ட், சோதி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

கோரே ஆண்டர்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.