New Zealand was the first to play India Won by 53 runs ...

நியூஸிலாந்திற்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதால் மூன்று ஆட்டங்களைக் கொண்ட தொடரில் 1-0 என கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

நியூஸிலாந்திற்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணியில் களமிறங்கிய தவன் - ரோஹித் இணை அசத்தலான தொடக்கத்தை அணிக்கு கொடுத்தது.

இருவருமே அரைசதம் கடந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவன் 80 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த பாண்டியா டக் அவுட் ஆக, கேப்டன் கோலி களம் கண்டார்.
கோலி தனது பங்கிற்கு விளாச, மறுமுனையில் 80 ஓட்டங்கள் எட்டிய நிலையில் ரோஹித் ஆட்டமிழந்தார். அவர் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை எடுத்தார்.

ரோஹித்தை அடுத்து வந்த தோனி, முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்டார். இவ்வாறாக 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவித்தது இந்தியா.

கோலி 26 ஓட்டங்கள், தோனி 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூஸிலாந்து தரப்பில் ஐஷ் சோதி 2, போல்ட் ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் லதாம் மட்டும் அதிகபட்சமாக 39 ஓட்டங்கள் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 28 ஓட்டங்கள், டாம் புரூஸ் 10 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களையே எட்டியது நியூஸிலாந்து.

சேன்ட்னர் 27 ஓட்டங்கள், சோதி 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய தரப்பில் சாஹல், படேல் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஸ்வர், பூம்ரா, பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றியின்மூலம் மூன்று ஆட்டங்களைக் கொண்ட தொடரில் 1-0 என கணக்கில் முன்னிலை வகிக்கிறது இந்தியா.