New Zealand to defeat the West Indies and capture the series Wackling game attracted fans

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளது.

நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கம் முதல் கப்திலும் மன்ரோவும் மேற்கு இந்திய தீவுக்கள் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தார்கள். முதல் 6 ஓவர்களில் 63 ஓட்டங்கள் குவித்தார்கள்.

பவர்பிளே முடிந்தபிறகும் இருவருடைய அதிரடி ஆட்டம் நிற்கவில்லை. தொடர்ந்து சிக்ஸும் பவுண்டரிகளுமாக அடித்து ரன் ரேட்டை உயர்த்திக்கொண்டே இருந்தார்கள். 10-வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 118 ஓட்டங்கள் எடுத்திருந்தது நியூஸிலாந்து.

கடைசியில் 12-வது ஓவரில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 38 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கப்தில்.

பத்ரீ வீசிய 13-வது ஓவரில் மன்ரோவும் ப்ரூஸும் 20 ஓட்டங்கள் சேர்த்தார்கள். இதனால் 13-வது ஓவரிலேயே 150 ஓட்டங்களை எட்டியது நியூஸிலாந்து.

பின்னர் 23 ரன்களில் ப்ரூஸின் விக்கெட்டை வீழ்த்தி ஆறுதல் அடைந்தது மேற்கு இந்திய தீவுகள் அணி. இதன்பிறகு 47 பந்துகளில் 10 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார் மன்ரோ. இது அவருடைய 3-வது டி20 சதமாகும்.

16-வது ஓவரிலேயே 200 ஓட்டங்களை எட்டி அசத்தியது நியூஸிலாந்து. பிறகு கிட்சன் 9 ஓட்டங்களிலும் கேன் வில்லியம்சன் 19 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, கடைசி ஓவரின் முதல் பந்தில் 104 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் காலின் மன்ரோ.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்கள் குவித்துள்ளது. பிலிப்ஸ் 7 ஓட்டங்கள் , சான்ட்னர் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். கடைசி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்தாலும் 60 ஓட்டங்கள் எடுத்தது நியூஸிலாந்து.

கெய்ல் வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஆட்டத்தில் திருப்பம் உண்டாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஓவரிலேயே வால்டன், கெய்ல் ஆகிய இருவரும் தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தார்கள். இருவருமே ரன் எதுவும் எடுக்கவில்லை.

இதன்பின்பு வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்தன. பிளெட்சர் மட்டும் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் எடுத்தார். 16.3 ஓவர்களில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

இதனால் 3-வது டி20 போட்டியை 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து. மேலும் டி20 தொடரை 2-0 என்கிற கணக்கில் வென்றுள்ளது.

உலக சாதனை நிகழ்த்தியுள்ள காலின் மன்ரோ ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.