இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து. 

நியூஸிலாந்தின் டுனெடினில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 335 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 49.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் விளாசி வென்றது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்துவீச, பேட் செய்த இங்கிலாந்தில் தொடக்க வீரர் ஜேசன் ராய் 42 ரன்கள் எடுத்தார். உடன் வந்த ஜானி பேர்ஸ்டோவ் 138 ஓட்டங்கள் விளாசினார். அவரோடு இணைந்த ஜோ ரூட் 102 ஓட்டங்கள் அடித்தார். 

இந்த இணை 2-வது விக்கெட்டுக்கு 190 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடியவர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, டாம் கரன் 22 ஓட்டங்கள் , மார்க் வுட் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இங்கிலாந்தின் தரப்பில் ஐஸ் சோதி 4 விக்கெட்கள், காலின் மன்ரோ, டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்கள், டிம் செளதி ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் தொடக்க ஜோடியான மார்டின் கப்டில் - காலின் மன்ரோ டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சனுடன் இணைந்த ராஸ் டெய்லர் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

வில்லியம்சன் 45 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த டாம் லதாம் 71 ஓட்டங்கள் சேர்த்து நடையைக் கட்டினார். கடைசி விக்கெட்டாக கிரான்ட்ஹோம் 23 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, டெய்லர் - ஹென்றி நிகோலஸ் ஜோடி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தியது.

டெய்லர் 17 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 181 ஓட்டங்கள் , ஹென்றி நிகோலஸ் 13 ஓட்டங்கள் எடுத்திருந்தனர். 

இங்கிலாந்து தரப்பில் டாம் கரன் 2 விக்கெட்கள், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

ஆட்டநாயகனாக ராஸ் டெய்லர் அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியின்மூலம் 5 ஆட்டங்களைக் கொண்ட இத்தொடர் தற்போது 2-2 என சமநிலையில் உள்ளது.