இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெறும் நியூசிலாந்து அணி வெறும் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

நேப்பியரில் இன்று காலை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டில் மற்றும் கோலின் முன்ரோ ஆகிய இருவருமே ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷமி வீசிய இரண்டாவது ஓவரில் கப்டிலும் 4வது ஓவரில் முன்ரோவும் வெளியேறினர். 

இதையடுத்து கேன் வில்லியம்சனும் அனுபவ ரோஸ் டெய்லரும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். அவர்களின் முயற்சியை தகர்த்த சாஹல், டெய்லரையும் அவரை தொடர்ந்து டாம் லதாமையும் வீழ்த்தினார். ஹென்ரி நிகோல்ஸ் 12 ரன்களில் கேதர் ஜாதவின் பந்தில் ஆட்டமிழந்தார். சாண்ட்னெர் 14 ரன்களில் ஷமியிடம் வீழ்ந்தார். முதல் 6 விக்கெட்டுகளில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாத குல்தீப், வில்லியம்சனிடம் இருந்து தனது விக்கெட் கணக்கை தொடங்கினார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் வில்லியம்சன், அரைசதம் கடந்தார். 64 ரன்களில் அவரை குல்தீப் வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 146 ரன்கள் இருந்தபோது வில்லியம்சன் ஆட்டமிழந்தார். அடுத்த 11 ரன்களில் எஞ்சிய மூன்று விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்தது. வில்லியம்சனுக்கு பிறகு டெய்லெண்டர்ஸ் மூவரையும் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். இதையடுத்து 38 ஓவரில் 157 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. 

இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் ஷமி 3 விக்கெட்டுகளையும் சாஹல் 2 விக்கெட்டுகளையும் கேதர் ஜாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து 158 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் தவானும் ஆடிவருகின்றனர்.