New Tamil Nadu Cricket Association Introducing Women T-20 Cricket Tournament

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் புதிய முயற்சியாக மகளிர் ஒரு நாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைச் செயலாளர் ஆர்.ஐ.பழனி நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: "சிறுவர் மற்றும் சிறுமியர் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளை டிஎன்சிஏ தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

சென்னை நகரம் மற்றும் மாவட்டங்களில் இதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சி அடைந்து வருவதால், டிஎன்சிஏவும் இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது. 

இளம் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒரு நாள் மற்றும் டி 20 என இரு வகையான போட்டிகளை ஜூன் மாதத்தில் நடத்த உள்ளோம்.

இந்தியன் வங்கி இதற்கான ஸ்பான்சராக உள்ளனர். அவர்கள் ஏற்கெனவே விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். 

கிரிக்கெட் வீராங்கனைகள் எல்லோ சேலஞ்சர்ஸ், ரெட் ரேஞ்சர்ஸ், ஓயிட் வாரியர்ஸ், புளு அவெஞ்சர்ஸ், கிரீன் இன்வேடர்ஸ், சில்வர் ஸ்ட்ரைக்கர்ஸ் என 6 அணிகளாக பிரிக்கப்பட்டு ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடுவர்.

இந்தப் போட்டிகள் 15-ஆம் தேதி முதல் தொடங்கி வரும் 30-ஆம் தேதியோடு நிறைவு பெறும்" என்று அவர் தெரிவித்தார்.