இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின் நேரலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான முரளி கார்த்திக் அசிங்கப்பட்டார். 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி இந்திய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தினர். 

ஹெட்மயரும் ஹோப்பும் சிறப்பாக ஆடி இந்திய அணியை மிரட்டினர். அதிலும் ஹெட்மயரின் ஆட்டம், இந்திய அணியை மிரளவைத்தது. அவரை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். அவர் களத்தில் ஆடிக்கொண்டிருக்கும்போது, இந்திய அணியின் தோற்றுவிடும் என்ற மனப்பான்மைதான் அனைவருக்குமே இருந்தது. அவர் அவுட்டான பிறகுதான் போட்டிக்குள் இந்திய அணி வந்தது. 

ஜடேஜா, சாஹல் ஆகியோரின் பவுலிங்கை சிதறடித்த ஹெட்மயர், 7 சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். 94 ரன்களில் அவுட்டாகி சதத்தை தவறவிட்டார். இவர் ஒருபுறம் அதிரடியாக ஆடினாலும் மறுமுனையில் நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடி வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றியை நோக்கி இழுத்து சென்ற ஷாய் ஹோப் சதம் விளாசினார். ஆனால் கடைசி நேரத்தில் இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி வெஸ்ட் இண்டீஸை கட்டுப்படுத்தி வெற்றியை தடுத்து டிரா செய்தனர்.

போட்டிக்கு பிறகு ஷாய் ஹோப்பை இண்டர்வியூ செய்ய அழைத்த வர்ணனையாளர் முரளி கார்த்திக் தவறுதலாக ஹோப்பை ஹெட்மயர் என்று அழைத்துவிட்டார். நேரலையில் முரளி கார்த்திக் பெயரை மாற்றி கூறிவிட்டார். பின்னர் உடனே சுதாரித்துக்கொண்டு சரியாக அழைத்தார். எனினும் நெட்டிசன்கள் முரளி கார்த்திக்கை விட்டுவைக்கவில்லை. பெயரை மாற்றி அழைத்த முரளி கார்த்திக்கை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.