தினேஷ் கார்த்திக் அவரது ஜெர்சியில் பெயரை குறிப்பிடாமல் இனிஷியலை மட்டும் குறிப்பிட்டிருப்பதை கண்டித்த முன்னாள் வீரர் கவாஸ்கரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. லீக் சுற்று முடிந்து சூப்பர் 4 சுற்று இன்று தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

கடந்த 19ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இந்தியாவின் இன்னிங்ஸின்போது 18வது ஓவரை வீசிய ஃபகார் ஜமான், தனது தொப்பியை திருப்பி மாட்டிக்கொண்டு பந்துவீசினார். ஃபகார் ஜமானின் செயல் சரியானது அல்ல என கமெண்ட்ரி செய்த கவாஸ்கர் கண்டித்தார். தொப்பியை திருப்பி போடுவது போன்ற செயல்களை எல்லாம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் செய்யலாம். தேசிய அணிக்காக ஆடும்போது இப்படியெல்லாம் செய்யக்கூடாது. ஃபகார் ஜமானிடம் இதை அந்த அணியின் கேப்டனாவது சொல்லியிருக்கலாம் என கவாஸ்கர் தெரிவித்தார். 

அதேபோல தினேஷ் கார்த்திக்கையும் கவாஸ்கர் கண்டித்தார். தினேஷ் கார்த்திக், அவரது பெயரின் இனிஷியலை மட்டும் “DK" என்று குறிப்பிட்ட ஜெர்சியைத்தான் அணிந்துவருகிறார். அதையும் கவாஸ்கர் கண்டித்துள்ளார். அவரது பெயரை மக்கள் அடையாளம் காணும்விதமாக பெயரைத்தான் ஜெர்சியில் குறிப்பிட வேண்டும். அவரை டிகே என்று மற்ற வீரர்கள் அழைக்கிறார்கள் என்றாலும் கூட, அவரது பெயரை குறிப்பிட்டு இனிஷியலையும் சேர்த்துக்கொள்ளலாம் என கவாஸ்கர் தெரிவித்தார்.

தினேஷ் கார்த்திக் குறித்த கவாஸ்கரின் கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சரியாக ஆடவில்லை என்றால் விமர்சிக்கலாம். அதைவிடுத்து, ஜெர்சியில் பெயர்போடுவதை எல்லாம் விமர்சிக்கக்கூடாது என்றும் தினேஷ் கார்த்திக் நீண்ட காலமாகவே டிகே என்று எழுதிய ஜெர்சியைத்தான் பயன்படுத்தி வருகிறார். அது இப்போதுதான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா என்றும் காட்டமாக கேட்டுள்ளனர். இதேபோல பலரும் பல விதமான பதிலடிகளை கொடுத்துவருகின்றனர்.