ரோஹித் சர்மாவை கண்டு விராட் கோலி பயப்படுவதாகவும், வேண்டுமென்றே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித்தை கோலி ஓரங்கட்டுவதாகவும் ரோஹித்தின் ரசிகர்களும் நெட்டிசன்களும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். 

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடி மிரட்டும் ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதாக சோபிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை விளாசி சாதனை படைத்துள்ள ரோஹித், டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் மூன்று சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். 

கடந்த 2013ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் ரோஹித்திற்கு அறிமுக டெஸ்ட் தொடர். அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் மிடில் ஆர்டரில் இறங்கி சதமடித்தார் ரோஹித் சர்மா. அதன்பிறகு 23 போட்டிகளில் ஆடி ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். மொத்தமாக இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 3 சதங்கள், 9 அரைசதங்களுடன் 1479 ரன்கள் அடித்துள்ளார். 

இந்த மூன்று சதங்களில் 2 சதங்களை முதல் 2 போட்டிகளிலேயே அடித்துவிட்டார் ரோஹித். அவர் டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடாததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட சமீபகாலமாக வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடியதுதான் ரோஹித் கடைசியாக ஆடிய டெஸ்ட் போட்டி. அதன்பிறகு அந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும் ரோஹித்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

அதைத்தொடர்ந்து நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித் சேர்க்கப்படவில்லை. தொடக்க வீரர்கள் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பியதை அடுத்து, தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓபனிங் செய்ய தயாராக இருப்பதாக ஓபனாக தெரிவித்தார் ரோஹித். ஆனால் மூன்றாவது போட்டியில் தவானும் ராகுலும் ஓரளவிற்கு ஆடிவிட்டனர். கடைசி இரண்டு போட்டிகளுக்கான டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ரோஹித் சேர்க்கப்படவில்லை. இளம் வீரர் பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இது ரோஹித்தின் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், ரோஹித்திற்கு தொடர்ந்து அணியில் இடம் மறுக்கப்படுவதற்கு கோலி தான் காரணம் என ரோஹித்தின் ரசிகர்கள் கருதுகின்றனர். அதனால் கோலியை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ரோஹித்தை கண்டு கோலி பயப்படுவதாகவும் ரோஹித்தை வேண்டுமென்றே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டுவதாகவும் விமர்சித்துள்ளனர்.