உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா 8-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றமளித்தார். அதே சமயம், அறிமுக வீரரான சச்சின் யாதவ் 4-வது இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதிப்போட்டியில் அவர் 8-வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்திருக்கிறார். அதே சமயம், அறிமுக வீரரான சக இந்திய வீரர் சச்சின் யாதவ் 4-வது இடத்தைப் பிடித்து அசத்தினார். அவர் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையையும் பதிவுசெய்தார்.
ஈட்டி ஏறிதல் போட்டி
டோக்கியோவில் நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், எந்தவொரு வீரரும் 90 மீட்டர் தூரத்தைக் கடக்கவில்லை. இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா தனது ஐந்து முயற்சிகளிலும் சிறப்பாக செயல்பட முடியாமல், 84.03 மீட்டர் தூரம் எறிந்து 8-வது இடத்துடன் வெளியேறினார். 2021-ல் இதே டோக்கியோ மைதானத்தில் ஒலிம்பிக் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, இந்த முறை ஐந்தாவது முயற்சியில் தவறிழைத்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
போட்டியின் விதிமுறைப்படி, முதல் ஆறு இடங்களில் இருப்பவர்கள் மட்டுமே இறுதி மற்றும் ஆறாவது சுற்றில் போட்டியிடுவார்கள். இந்த நிலையில், இந்தியாவின் சார்பாக இறுதிச் சுற்றில் சச்சின் யாதவ் மட்டுமே இடம்பிடித்தார்.
சச்சின் யாதவ்
சச்சின் யாதவ் தனது முதல் முயற்சியிலேயே 86.27 மீட்டர் தூரம் எறிந்து தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்தார். இதன் மூலம், நீரஜ் சோப்ரா மட்டுமல்லாமல், ஜெர்மனியின் நட்சத்திர வீரர் ஜூலியன் வெபர் (86.11 மீ), ஒலிம்பிக் சாம்பியன் அர்ஷத் நதீம் (82.75 மீ) ஆகியோரையும் முந்தினார்.
இந்த போட்டியில் டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த கேஷார்ன் வால்காட் 88.16 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (87.38 மீ) வெள்ளிப் பதக்கத்தையும், கர்டிஸ் தாம்சன் (86.67 மீ) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். கடந்த முறை வெள்ளி வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், நான்காவது சுற்றிலேயே வெளியேறினார்.
நீரஜ் சோப்ரா
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியில் 83.65 மீட்டரும், இரண்டாவது முயற்சியில் 84.03 மீட்டரும் எறிந்தார். மூன்றாவது முயற்சியில் அவர் தவறிழைத்தார். பின்னர், நான்காவது முயற்சியில் 82.86 மீட்டர் எறிந்தார். தனது ஐந்தாவது முயற்சியில், 85.54 மீட்டர் தூரத்தை கடந்து கென்யாவின் ஜூலியஸ் யெகோவை முந்தினால் மட்டுமே போட்டியில் நீடிக்க முடியும் என்ற நிலையில், அவரால் அது முடியவில்லை.
ஈட்டி எறிந்த பிறகு, அவர் ஒருபுறமாக சரிந்து விழுந்து, கோட்டைத் தாண்டினார். இதனால், நடுவர் சிவப்பு கொடியைக் காட்டினார். உடனடியாக தனது இடுப்பு பெல்ட்டைக் கழற்றி முகத்தை மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தார். தொடர்ந்து 85 மீட்டருக்கு மேல் எறிந்துவரும் நீரஜ், இந்த முறை ஐந்து முயற்சிகளிலும் 85 மீட்டர் தூரத்தைக் கூட கடக்காதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024 மே மாதம் தோஹா டயமண்ட் லீக் தொடரில், 90.23 மீட்டர் தூரம் எறிந்து 90 மீட்டர் சாதனையை எட்டியிருந்த நீரஜ் சோப்ரா, அதன் பிறகு அவரது செயல்பாட்டில் ஒரு சரிவு காணப்படுகிறது.
