National Youth Junior Athletic Championships starts today
16-வது ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான இளையோர் தடகளப் போட்டிகள் இன்று கோவையில் தொடங்குகின்றன.
தமிழ்நாடு தடகளச் சங்கம், கோவை மாவட்ட தடகளச் சங்கம், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து 16-வது ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான தடகளப் போட்டிகளை கோவை நேரு விளையாட்டு அரங்கில் இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடத்துகின்றன.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தடகளச் சங்கச் செயலாளர் சி.லதா, "கோவையில் நடைபெறும் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதில்,16 வயது முதல் 20 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண்கள் விளையாடுகின்றனர். இந்தப் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து 45 ஆண்கள், 27 பெண்கள் உள்பட 72 பேர் பங்கேற்க உள்ளனர்.
இதில், மும்முறை தாண்டும் போட்டியில் பிரியதர்ஷினி, 200, 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சுபா, மும்முறை தாண்டுதல் ஆடவர் பிரிவில் கோவையைச் சேர்ந்த அமல்ராஜ், 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கோவையைச் சேர்ந்த சமயஸ்ரீ உள்ளிட்ட சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பலர் பங்கேற்கின்றனர்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் ஜப்பானில் உள்ள ஜீபுவில் நடைபெறும் ஆசியத் தடகளப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தப் போட்டியின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இதில், மாநகர காவல் ஆணையர் கு.பெரியய்யா, தமிழ்நாடு தடகளச் சங்கத் தலைவர் தேவாரம், மாநகராட்சி ஆணையாளர் கே.விஜயகார்த்திகேயன், மாவட்ட திட்டக்குழு இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்" என்று தெரிவித்தார்.
