Asianet News TamilAsianet News Tamil

National Sports Day: மிரண்ட ஹிட்லர்.. வியந்த பிராட்மேன்..! யார் இந்த தியான் சந்த்..?

கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் டான் பிராட்மேன், தியான் சந்தின் ஆட்டத்தை பார்த்துவிட்டு, நாங்கள் கிரிக்கெட்டில் ரன் அடிப்பதை போல, தியான் சந்த் கோல்களை அடிக்கிறார் என்று வியந்து புகழ்ந்திருக்கிறார். 

national sports day who is this dhyan chand
Author
First Published Aug 29, 2022, 6:14 PM IST

கிரிக்கெட்டை மட்டுமே தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நாடு இந்தியா. இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றபோதிலும், கிரிக்கெட்டுக்குத்தான் ரசிகர்களும் அதிகம், வியாபாரமும் அதிகம். அதனால் கிரிக்கெட்டும், அதன் வியாபாரமும், கிரிக்கெட் வீரர்களும் மட்டுமே பூதாகரமாக வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில், மற்ற விளையாட்டுகளுக்கு அந்தளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலை இந்தியாவில் நிலவுகிறது. 

கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மட்டுமே கொண்டாடப்படும் இந்தியாவின் தேசிய விளையாட்டு தினம் இன்று. ஆனால் இன்றைய தலைமுறை பெரும்பாலும் அறிந்திர வாய்ப்பில்லாத, ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும் தலைசிறந்த ஹாக்கி வீரருமான தியான் சந்தின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29(இன்று) தான் தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த தியான் சந்தை பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொண்டால், மிரண்டுவிடுவீர்கள். அப்பேர்ப்பட்ட சாதனைகளுக்கும் சம்பவங்களுக்கும் சொந்தக்காரர். 1905ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் பிறந்த தியான் சந்த், தலைசிறந்த ஹாக்கி வீரர். முதன்முறையாக உருவாக்கப்பட்ட இந்திய ஹாக்கி அணியில் தியான் சந்தும் இடம்பெற்றிருந்தார். முதல் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துடன் ஆடியது. அதன்பின்னர் ஏராளமான போட்டிகளில் ஆடியது இந்திய ஹாக்கி அணி. அந்த காலக்கட்டத்தில் இந்திய அணி அடித்த 192 கோல்களில் 100 கோல்கள் தியான் சந்த் அடித்தது. 

இதையும் படிங்க - பழைய பகையை மறந்து மஞ்சரேக்கரை மன்னித்து ஏற்ற ஜடேஜா..! பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின் நடந்த சுவாரஸ்யம்

கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் டான் பிராட்மேன், தியான் சந்தின் ஆட்டத்தை பார்த்துவிட்டு, நாங்கள் கிரிக்கெட்டில் ரன் அடிப்பதை போல, தியான் சந்த் கோல்களை அடிக்கிறார் என்று வியந்து புகழ்ந்திருக்கிறார். கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்பது எளிது. ஆனால் கிரிக்கெட்டில் அடிக்கப்படும் ரன்கள் அளவிற்கு தியான் சந்தின் கோல்களை ஒப்பிட்டார் டான் பிராட்மேன். டான் பிராட்மேனையே வியக்கவைத்தவர் தியான் சந்த்.

1928 ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல காரணமாக திகழ்ந்தவர் தியான் சந்த். தியான் சந்த் சவால்களை அசால்ட்டாக எதிர்கொண்டு சவால் விட்டவருக்கு சவுக்கடி கொடுப்பதில் வல்லவர். சர்வாதிகாரி ஹிட்லரின் அழைப்புக்கே செவிமடுக்க மறுத்த தேசப்பற்றாளர் தியான் சந்த்.

1936 ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியில் நடந்தது. மற்ற அனைத்து போட்டிகளிலும் ஜெர்மனி நன்றாக ஆடி பதக்கங்களை குவித்து கொண்டிருக்க, ஒரு விளையாட்டில் மட்டும் ஜெர்மனியால் மட்டுமல்ல, எந்த நாட்டாலும் இந்தியாவை நெருங்க முடியவில்லை. அதுதான் ஹாக்கி. அதற்கு காரணம் தியான் சந்த். சர்வதேச ஹாக்கி வீரர்கள், மற்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாது, ஹிட்லரையே தெறிக்கவிட்டவர் தியான் சந்த். 

களத்தில் தியான் சந்தின் கட்டுப்பாட்டுக்குள் ஹாக்கி பந்து வந்துவிட்டால், எதிரணியினர், அதை கைப்பற்றும் தங்கள் நோக்கத்தை கைவிட்டுவிடலாம். அந்தளவிற்கு அதை சாமர்த்தியமாகவும் லாவகமாகவும் எடுத்துச்சென்று கோல் போட்டுவிடுவார் தியான் சந்த். தியான் சந்தின் அசாத்தியமான ஆட்டத்தை கண்டு வியந்த ஜப்பானியர்கள், அவரது ஹாக்கி மட்டைக்குள் ஏதேனும் மறைத்து வைத்திருக்கிறாரா என்று பார்த்தது கூட உண்டும். ஜப்பானியர்களின் சந்தேகத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஒரு போட்டியில் ஹாக்கி மட்டைக்கு பதிலாக வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தி ஆடி, அதிலும் கோல்களை அடித்து மிரட்டினார் தியான் சந்த். 

1936 ஒலிம்பிக்கில் ஹாக்கியில் வென்றே தீர வேண்டும் என்ற உறுதியில் இந்திய அணியை எதிர்கொண்டது ஜெர்மனி. அந்த போட்டியை காண ஹிட்லரும் வந்திருந்தார். அந்த போட்டியின் முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாம் பாதியில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறும் என நினைத்த ஒட்டுமொத்த ஜெர்மனிக்கும் இந்திய அணி அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது. இரண்டாம் பாதியில் இந்திய அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் ஜெர்மனி திணறியது. இந்த போட்டியில் தியான் சந்த் மீது ஜெர்மனி கோல் கீப்பர் வேண்டுமென்றே மோதியதில் தியான் சந்தின் பல் உடைந்தது. ஆனாலும் அதற்கெல்லாம் அசராத தியான் சந்த், அதன்பின்னர் மேலும் ஆக்ரோஷமாக ஆடி கோல்களை அடித்தார். அந்த போட்டியில் இந்திய அணி 8-1 என அபார வெற்றி பெற்ரது. தியான் சந்த் அந்த போட்டியில் 3 கோல்களை அடித்தார். தியான் சந்தின் ஆட்டத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட ஹிட்லர், தியான் சந்தை தனியாக அழைத்து பேசினார். 

இதையும் படிங்க - இந்தியாவிடம் தோற்றதற்கு இதுதான் காரணம்.. நான் பலமுறை சொல்லியும் நீங்க கேட்கல..! பாக்., அணியை விளாசிய அக்தர்

”ஜெர்மனியின் ராணுவத்தில் மதிப்புமிக்க பதவி அளிக்கிறேன். இங்கேயே இருந்துவிடுங்கள்” என்று தியான் சந்திற்கு அரிய வாய்ப்பை அளித்தார் ஹிட்லர். ஆனால், ”தங்கள் அன்புக்கு நன்றி. இந்தியாவில் எனக்குப் பெரிய குடும்பம் இருக்கிறது. என்னால் இங்கிருக்க முடியாது” என்று மிகவும் தன்மையாகவும் தெளிவான உறுதியுடனும் மறுத்துவிட்டார் தியான் சந்த்.  சரி அப்படியென்றால், ஜெர்மனியின் ஹாக்கி அணியிலாவது இணைந்துவிடுமாறு ஹிட்லர் அழைத்துள்ளார். ஆனால் நான் இந்தியன், என் தேசம் தவிர வேறு எந்த அணிகளுக்கும் ஆடமாட்டேன் என்று ஹிட்லரிடமே மறுத்துவிட்டு வந்தவர் தியான் சந்த் என்ற வரலாறு உண்டு. 

வெறும் விளையாட்டு வீரராக மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், நினைவில் வைத்துக்கொள்ளப்படும் வரலாறு தியான் சந்த். 

Follow Us:
Download App:
  • android
  • ios