பழைய பகையை மறந்து மஞ்சரேக்கரை மன்னித்து ஏற்ற ஜடேஜா..! பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின் நடந்த சுவாரஸ்யம்
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு பின் சஞ்சய் மஞ்சரேக்கர் - ரவீந்திர ஜடேஜா இடையே நடந்த சுவாரஸ்யமான சம்பவ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. துபாயில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி கடைசி ஓவரில் இலக்கை அடித்து வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் (0), ரோஹித் சர்மா(12) ஆகிய இருவருமே ஏமாற்றமளிக்க, நன்றாக ஆடிய கோலியும் 35 ரன்கள் அடித்திருந்த நிலையில், அவசரப்பட்டு 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜடேஜாவும் ஹர்திக் பாண்டியாவும் பொறுப்புடன் ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். ஜடேஜா 29 பந்தில் 35 ரன்களும், பாண்டியா 17 பந்தில் 33 ரன்கள் அடித்தார்.
இதையும் படிங்க - இந்தியாவிடம் தோற்றதற்கு இதுதான் காரணம்.. நான் பலமுறை சொல்லியும் நீங்க கேட்கல..! பாக்., அணியை விளாசிய அக்தர்
கோலி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. போட்டிக்கு பின் ஜடேஜாவை நேர்காணல் செய்தார் சஞ்சய் மஞ்சரேக்கர். 2019 ஒருநாள் உலக கோப்பையின்போது, ஜடேஜாவை துண்டு துணுக்கு வீரர் என சஞ்சய் மஞ்சரேக்கர் வர்ணனையில் விமர்சித்திருந்தார். இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜாவை மஞ்சரேக்கர் விமர்சித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜடேஜாவை விமர்சனம் செய்ததை மனதில் வைத்துக்கொண்டு, அவரை நேர்காணல் செய்யும்போது, என்னுடன் பேசுவதில் ஆட்சேபனை இல்லையே என ஜடேஜாவிடம் கேட்டார் மஞ்சரேக்கர். அதற்கு, கண்டிப்பாக.. அதெல்லாம் எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை என்று ஜடேஜா சிரித்துக்கொண்டே பதிலளித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.