National doping preventive organization has no power to check doping with Indian cricketer - BCCI

இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் ஊக்கமருந்து பரிசோதனை நடத்த தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புக்கு (நாடா) அதிகாரம் கிடையாது என்று அந்த அமைப்பின் தலைவருக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக நாடா தலைவர் நவீன் அகர்வாலுக்கு பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி எழுதிய கடிதத்தில் கூறியது:

"பிசிசிஐ-ஆனது தேசிய விளையாட்டு சம்மேளனம் அல்ல. அந்த வகையில் பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தும் அதிகாரம் நாடாவுக்கு கிடையாது எனவே, கிரிக்கெட் போட்டிகளின்போதோ, அவை இல்லாத காலகட்டத்திலோ இந்திய வீரர்களிடம் நாடா ஊக்கமருந்து பரிசோதனை நடத்துவதற்கு பிசிசிஐ அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய தேவை இல்லை.

பிசிசிஐ ஏற்கெனவே வலுவான ஊக்கமருந்து பரிசோதனை முறைகளை செயல்படுத்தி வருகிறது. வீரர்களின் மாதிரிகள், சர்வதேச ஊக்கமருந்து சோதனை மற்றும் மேலாண்மை (ஐடிடிஎம்) அமைப்பின் மூலம், "வாடா'வால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகங்களிலேயே (என்டிடிஎல்) பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஐசிசியும் இந்த முறையையே பின்பற்றி வருகிறது.

மேலும், பிசிசிஐ-ஆனது ஐசிசியுடன் இணைந்த ஒரு அமைப்பாகும். எனவே, ஐசிசியின் விதிகளுக்கு உள்பட்டு மட்டுமே பிசிசிஐ செயல்படும்" என்று அதில் ராகுல் ஜோரி தெரிவித்துள்ளார்.