National Athletic Athletic Championship dominated by Ariyana


கோவையில் 16-வது ஃபெடரேசன் கோப்பைக்கான தேசிய இளையோர் தடகளப் போட்டியின் முதல் நாளில் அரியாணா வீரர்கள் வெவ்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தினர்.

தமிழ்நாடு தடகளச் சங்கம், கோவை மாவட்டத் தடகளச் சங்கம், ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனம் ஆகியன இணைந்து கோவை, நேரு விளையாட்டு மைதானத்தில் ஃபெடரேசன் கோப்பைக்கான தேசிய இளையோர் தடகளப் போட்டியை நடத்துகிறது.

இப்போட்டியில் 16 முதல் 20 வயது வரையிலான இளையோர் பங்கேற்றனர். இதன் ஆண்கள் பிரிவு 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அரியாணா வீரர் அங்கித் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.8 விநாடியில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். 

அஜித்குமார் (குஜராத்) இரண்டாவது இடத்தையும், அபிநாத் சுந்தரேசன் (கேரளம்) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

அதேபோன்று, 5000 மீட்டர் ஓட்டப் பந்தயம் ஆண்கள் பிரிவில் அரியாணா வீரர் குர்பீத், பந்தய தூரத்தை 14 நிமிடம் 46.6 விநாடியில் கடந்து முதலிடத்தை பெற்றார்.

சஞ்சய்குமார் (தமிழகம்) இரண்டாவது இடத்தையும், அஜய்குமார் (உத்தரப் பிரதேசம்) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

மற்றொரு பிரிவான 10 ஆயிரம் மீட்டர் நடைப் போட்டிக்கான மகளிர் பிரிவில் உத்தரகண்ட் வீராங்கனை ரோஜி படேல், பந்தய தூரத்தை 51 நிமிடம் 44.5 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். 

மஞ்சு ராணி (குஜராத்) இரண்டாவது இடத்தையும், சினேகா (அரியாணா) மூன்றாவது இடத்தையும் பிடித்து அசத்தினர்.