My wish is to be the fourth player - senior player Dinesh Karthik ...
இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் புதிதாக இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு ஐபிஎல் போட்டி அனுபவம் கைகொடுக்கும் என்று மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் கூறினார்.
இலங்கைக்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய அணியில், கோலி, தவன், ரஹானே போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர், பாசில் தாம்பி, தீபக் ஹூடா ஆகிய இளம் வீரர்களுக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தினேஷ் கூறியது:
"இளம் வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவத்துடன் சர்வதேச போட்டிகளில் களம் காண்கின்றனர். அவர்களில் சிலர் 20-30 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
முன்பு போல, வாய்ப்பு வரும் வரையில் அவர்கள் போட்டிகளில் விளையாடாமல் தேங்கியிருக்கும் இருக்கும் நிலை தற்போது இல்லை.
ஐபிஎல் அனுபவம் தரும் நம்பிக்கையுடன் சர்வதேச களத்திற்கு வருகிறவர்கள் இந்த வாய்ப்பை நிச்சயம் முறையாக பயன்படுத்திக் கொள்வார்கள். மூத்த வீரர்கள் என்ற முறையில் நாங்களும் அவர்களுக்கு சில விஷயங்களில் உதவ முயற்சிக்கிறோம்.
ஒருநாள் போட்டியை பொருத்தவரையில் இந்திய அணி சரியான வடிவத்தை அடைந்துள்ளது. எனினும், டி20 போட்டிகளிலும் சரியான வீரர்களுடன் அணியை சமநிலைப்படுத்தும் வகையில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
ஒவ்வொரு வீரர்களும், வெவ்வேறு சூழ்நிலைகளில் எவ்வாறு நிலைக்கிறார்கள்? என்பதை அறிய முயற்சிக்கிறோம்.
பேட்டிங்கைப் பொருத்தவரையில், சூழ்நிலைக்கு ஏற்ப தேவைப்படும் இடத்தில் களம் காண விரும்புகிறேன். எனினும், எனக்கான பிரதான விருப்பமாக நான்காவது வீரராகவே ஆட எண்ணுகிறேன்" என்று அவர் கூறினார்.
